கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல கல்வி வலயங்களில், இன்று உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.

நேற்று (15) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற கொவிட் வைரஸ் தொற்று தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில்  அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும்  தெரிவிக்கையில்.....கொழும்பு மாவட்டத்திலுள்ள, கொழும்பு மாநகர சபை மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் பாடசாலை சுகாதார அலுவலகங்களின் ஊடாகவும் இந்த தடுப்பூசி வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களின் சில பாடசாலைகளிலும் இன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

நேற்று காலை தர்ஸ்டன் கல்லூரியில் உள்ள தடுப்பூசி மையத்தை பார்வையிட்டதாக தெரிவித்த அவர், அங்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் மற்றும் வெற்றிகரமாகவும் தடுப்பூசிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது" என்றும் அவர் தெரிவித்தார்

இதற்கமைய, அடுத்த சில நாட்களில், இலங்கையில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், அதாவது 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றும் 2021 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.