பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் போய்ச்சேர்ந்த 1987 ஆம் ஆண்டு இறுதிக் காலாண்டின் முதல்நாள் சுவாரஷ்யமான சம்பவத்துடன் ஆரம்பிக்கலாம். அதிபர் நடராஜா அனுமதிக்கும் வரை அலுவலக வாசலில் நின்றிருந்தேன். ஆயிரம் மாணவர் இடையே நான் தனியே அடையாளம் தெரிய நான் புதியவன் என்பது மட்டுமல்ல காரணம்; எல்லோரும் வெள்ளைக் காற்சட்டை அணிந்திருக்க நான் நீலக் காற்சட்டையுடன் சென்றிருந்தேன்.( என்னை அனுமதித்த அடுத்த நாள் அதிபர் நடராஜா பணிப்பபாளராக தவி உயர்வு பெற்று கண்டிக்கு சென்று விட எஸ் ஜோசப் Sir அடுத்து அதிபராக வந்தார், அவரும் பின்னாளில் பணிப்பாளராக கண்டியில் பணி புரிந்தார்)

என்னைப் புதிய மாணவன் என அறிந்து கொண்ட சிலர் விசாரித்துச் சென்றனர்.ஒருவர் வந்தார். ‘தம்பி புதுசா வந்து சேரவா?’ என்றார். ஆம் என்றேன். ‘எங்க ஊர்?’ ‘மடகொம்பரை’.

“அந்தப்பக்கம் கோப்பி எடுக்க ஏலுமா”? . ‘ஏலும்’  என பதில் அளித்தேன். ஆனால் கோப்பிக் கொட்டை (Coffee) எடுக்க ஏலுமா எனக்கேட்டால் அவர் வியாபாரியாக இருக்க வேண்டும். இவர் யார் பாடசாலைக்கு உள்ளே இப்படியான கேள்வியுடன்?  புதிய பாடசாலையான பூண்டுலோயா புதிராக இருந்தது!

பாடசாலையில் சேர்ந்ததன் பின்னர் ஒரு நாள் முதலாம் வகுப்பு மாணவர்களிடத்தில் சைவசமய பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த அவரைப் பார்த்ததும் உறுதி செய்து கொண்டேன்; ஆஹா இவர் கோப்பி வியாபாரி இல்லை. ஆசிரியர். ஆனாலும் இன்னுமொரு குழப்பம் இருந்தது. இவர் எப்படி ‘சைவ சமயம்’ படிப்பிக்கிறார்?!

பாடசாலையில் நாங்கள் ஒன்று சேர்ந்து நவராத்திரி விழா, மீலாத் விழா, ஒளி விழா ( Carols ) என எல்லாவற்றையும்  கொண்டாடி மகிழ்வோம்.இந்த நவராத்திரி மேடை அமைப்பில் நாங்கள் காட்டும் அலப்பறை இன்று நினைத்தாலும் சிரித்து அடங்காது. ஒருமுறை அந்த அலங்காரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்போய், அதன் அருகில் போன ஐயர் முதல் அனைவருக்கு “ ஷொக்” அடித்த ‘ஜோக்கும்’ உண்டு. 

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் காலை பூஜை முடிந்தவுடன் அன்றைய நாள் பற்றிய ‘சிறப்புரைகள்’ இடம்பெறும். நானும் பல தடவைகள் கல்வி, செல்வம், வீரம் பற்றியும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பெருமைகளை பேசி இருக்கிறேன். ஆசிரியர்களும் உரை வழங்குவார்கள். 

காலை பாடசாலை செல்வதில் ஒரு தாமதம் இருக்கும். நாங்கள் போகும் பஸ் 8 மணிக்குத்தான் நகரை அடையும்.பாடசாலையை அடைய 8:10 ஆகிவிடும். அப்படி வாணி விழா நாள் ஒன்றில் சென்றபோது அன்றைய ‘சிறப்புரையை’ ஆற்றிக் கொண்டிருந்தவர் எனக்கு ஆச்சரியமூட்டினார். அருகே நின்ற நண்பர் குணா விடம் ( குணசேகரன் - இப்போது சமுர்த்தி முகாமையாளர்) எனக் கேட்டேன். ‘குறிப்பும் ஸலவாத்தும்’ என்றார். 

அந்த நாட்களில் இரவு 9 மணி செய்திகள் முடிய இலங்கை வானொலியில் ‘குறிப்பும் சலவாத்தும்’ ஒலிபரப்பாகும். அதனை பரவலாக எல்லோரும் கேட்பதுண்டு. எனக்கும் அது பரீச்சயமானதுதான். அந்த குறிப்பும் சலவாத்தும் பாணியிலேயே இருந்தது ‘நவராத்திரி’ சிறப்புரை. 

ஆம், துர்க்கை, லட்சுமி , சரஸ்வதி பெருமைகளையும் கல்வி, செல்வம், வீரம் பெருமைகளையும் இஸ்லாமியத் தமிழில் வழங்கிக் கொண்டு இருந்மவர், நான் முதல் நாள் கோப்பி வியாபாரி என நினைத்த, அடுத்து முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு “ பாலும் தெளிதேனும்” என தேவாரம் சொல்லிக் கொடுத்தும் எனக்கு ஆச்சரியங்களைத் தந்த எங்கள் பாட்சாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர் யாசின் Sir. 

அன்றிலிருந்து எனக்கு நவராத்திரி என்றால் நினைவில் நிற்பது யாசின் சேரின்

“குறிப்பும் ஸலவாத்தும்”.

யாசின் Sir இன் படம் இல்லாவிட்டாலும் மனதில் அவரது தோற்றம் அ்ப்படியே உள்ளது. உயரம் குறைந்த, மெல்லிய, வெள்ளையான தோற்றம் கொண்ட எறும்பு போன்ற சுறுசுறுப்பு நிறைந்த மனிதர். கொத்மலை கலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர். பகுதி நேரமாக கோப்பி வியாபாரம் செய்தவர்.

( இந்தப்படத்தில் எங்கள் வகுப்பு ஆசிரியர்கள் வேலு விஸ்வநாதன் ( வலஅது)  Sir ( English), தர்மலிங்கம் விக்னேஷ்வரன் Sir ( இடது) ஆகியோருடன் எங்கள் வகுப்புத் தோழிகள் (பானுப்பரியா, செல்வகுமாரி, மஞ்சுளா, திலகமணி, செலின் ரொஷானி, இந்திராணி, ஷர்மிளா) ஆகியோர் நிற்கும் நினைவுப்படம் 1990 ல் எடுத்தது. துரதிஷ்டவசமாக சாதாரண தரம் - OL- படித்த காலத்தில் எடுத்த ஏனைய நிழற்படங்கள் கரையானுக்கு இரையாகிவிட்டன; இந்த ஒரு படத்தைத் தவிர. )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.