பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஓரங்கமான ஐக்கிய மகளிர் சக்தியினால் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த 1991 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச ரீதியில் 'ஒரேன்ஞ் த வேல்ட்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதன்படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றை முடிவிற்குக்கொண்டுவருதல் ஆகியவற்றை முன்னிறுத்திய பிரசாரங்கள், போராட்டங்கள், கலந்துரையாடல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.

அந்தவகையில் நேற்றிலிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான 16 நாட்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய மகளிர் சக்தி ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன் ஓரங்கமாகவே நேற்றைய தினம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் கொழும்பு, பொலன்னறுவை, கண்டி, கடுகன்னாவ, கபுறுபிட்டிய, அம்பலாந்தோட்டை, குருணாகலை, ஹிரியால, பண்டாரவளை, வலப்பனை, திகன மற்றும் மாத்தளை ஆகிய நகரங்களில் மேற்படி விழிப்புணர்வுப் போராட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தலைமைதாங்கியதுடன், ஐக்கிய மகளிர் சக்தியில் அங்கம் வகிக்கும் மேலும் பல பெண் உறுப்பினர்களும் அதில் கலந்துகொண்டிருந்தனர்.

'ஒரேன்ஞ் த வேல்ட்' என்ற தொனிப்பொருளில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக அவர்கள் ஆரஞ்சுநிற ஆடைகளை அணிந்திருந்ததுடன் 'தயவுசெய்து என்னைத் துன்புறுத்தவேண்டாம்', பாராளுமன்றத்திற்குள் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்கவேண்டும்', 'அவளுக்குப் பாதுகாப்பான எதிர்காலம்', 'பேரூந்துகளில் ஆண்களின் முறையற்ற நடத்தையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்', 'சமூகவலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டனம் செய்கின்றோம்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறுகையில்,

'பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் பிரசாரத்தை முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் ஊடாக இலங்கையிலும் முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

அந்தவகையில் வீடுகளில், பொது இடங்களில், பொதுப்போக்குவரத்து சேவைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை வீதி நாடகங்கள் வடிவில் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடலியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ இடம்பெறலாம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவையனைத்தையும் முடிவிற்குக் கொண்டுவருவதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்திருக்கின்றோம். முதலில் தனிநபர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கமுடியும்' என்று தெரிவித்தார்.

 நா.தனுஜா - வீரகேசரி 






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.