பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி துறந்துள்ளமையானது கோமாளித்தனத்தின் அதியுச்சமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது இராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதிக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதி சபாநாயகருக்கான தெரிவின் போது முன்னர் பதவி வகித்திருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவையே மீண்டும் ஆளும் தரப்பில் வேட்பாளராக நிறுத்தியபோதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் நாடகம் அம்பலமாகியிருந்தது.

அதனை நான் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தேன். இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் இராஜினாமாச் செய்வதாக அறிவித்திருக்கின்றார். இது கோமாளித்தனத்தின் அதியுச்சமான செயற்பாடாகும்.

கடந்த வியாழக்கிழமையன்று பிரதி சபாநாயகர் பதவிக்காக அவரது பெயர் முன்மொழியப்பட்டதையும், பின்னர் அவர் வெற்றி பெற்றதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஆளும் தரப்பு ஆதரவு அளித்தாலும் தான் சுயாதீனமாகச் செயற்படப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது பதவி விலகுவதாக கூறியுள்ளார். அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளின் நேரத்தினை விரயமாக்கியுள்ளார். பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான நிதியை விரயமாக்கியுள்ளார்.

ஆகவே குறித்த பிரதி சபாநாயகர் தெரிவுக்கான செலவான நேரத்திற்குரிய மொத்தச் செலவீனத்தினையும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடத்தில் இருந்தும், அவரைத் தெரிவு செய்த 148 பேரிடமிருந்தும் அறவீடு செய்ய வேண்டும்.

நாடு தற்போதுள்ள நெருக்கடியில் குறித்த தெரிவு நடவடிக்கைக்காக ஏறக்குறைய 4.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இது மக்களின் வரிப்பணமாகும். ஆகவே, குறித்த தொகையை உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதோடு, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடமிருந்து இரட்டிப்புத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

 (ஆர்.ராம், Virakesari)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.