வழக்கொன்றில் ஆஜராகாதமைக்காக போராட்டக்களத்தில் முன்னின்று செயற்பட்ட லஹிரு வீரசேகர மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக மக்களை ஒன்றுகூட்டியமை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, லஹிரு வீரசேகரவும் தெம்பிட்டியே சுகதானந்த தேரரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை இதனையடுத்தே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லோட்டஸ் வீதி, நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் நுழைவாயிலை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, ரங்க லக்மால் தேவப்பிரிய, எரங்க குணசேகர மற்றும் அருட்தந்தை அமில் ஜீவந்த ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று மற்றுமொரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கோட்டை பொலிஸார் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.