உயர் நீதிமன்றத்தின், முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல ஆகியோருக்கும் வெளிநாடு செல்ல இடைக்கால தடை விதிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் நீச்சல் வீரரும், பயிற்றுவிப்பாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனக ரட்ன ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

சட்டத்தரணி உபேந்திர குணசேகரவின் ஊடாக இந்தப் பிரேரணையை தாக்கல் செய்த மனுதாரர்கள், இந்த விவகாரத்தில் அவசரம் உள்ளதால், இந்த மனுவை ஜூலை 14 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுக்க கோரியுள்ளனர்.

முன்னதாக குறித்த மனுவை எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதிவரை ஒத்தி வைத்து கடந்த ஜூலை 6 ஆம்திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கண்ட பிரதிவாதிகளில் சிலர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், அதன் முறையான விசாரணை தடைப்படலாம் என்றும் நம்பத்தகுந்த முறையில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மனுதாரர்கள் முன்கூட்டியே மனுவை விசாரணைக்கு எடுக்க நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.

இதன்படி, இந்த மனு எதிர்வரும் வியாழக்கிழமை (14) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.