எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய ஜனாதிபதியை நியமித்தல், சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதுவரை நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் எழுத்துமூல கோரிக்கை விடுக்கவில்லை என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அவர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எழுத்து மூல கோரிக்கை விடுக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் 48 மணிநேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் பல கட்சிகள் தனித்தனியாக கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்ததுடன், ஜே.வி.பியும் நேற்றைய தினம் சந்திப்பில் ஈடுபட்டிருந்தது.

எவ்வாறாயினும், எந்தவொரு கட்சியும் இதுவரை இறுதி இணக்கப்பாட்டை எட்டவில்லை.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.