(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)
இலங்கையில் நிலைமை சீரடைந்து வருகிறது என்றும் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவுக்கு வருகை தந்துள்ளேன் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யா தெரிவித்தார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக, கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் கடந்த ஜூலை 9ஆம் திகதி மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி; அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடினர்.
அதன்பின் அவர்கள், அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இலங்கை முன்னாள் ஜனாதிபதி; கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்ததும், கோட்டாபய தனது குடும்பத்துடன் மாலைதீவுக்குச் சென்று பின்பு, சிங்கப்பூருக்குச் சென்றார். தொடர்ந்து, நாடு திரும்பும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். சுதந்திரத்திற்கு பின் இதுவரை இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போதல், எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது அந்நாட்டை வெகுவாக பாதித்தது.
இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் நிலைமை சற்று அடங்கிக் காணப்படுகிறது. பழைய நிலைக்கு இலங்கை மெதுவாகத் திரும்பி வருகிறது. இதுபற்றி குஜராத்துக்குச் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்ய செய்தியாளர்களிடம் பேசும்போது,
இலங்கைக்கு கடந்த 3 மாதங்கள் சோதனையாக இருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. பழைய நிலைக்கு நாட்டை கொண்டு வர அரசு மெல்ல முயன்று கொண்டிருக்கிறது.
இலங்கையில் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்கான சரியான தருணமிது. இந்தியாவின், குஜராத்தில் இலங்கையின் சுற்றுலாவை நான் ஊக்கப்படுத்தி வருகிறேன். இதற்காக சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சி ஒன்றை நாங்கள் நடத்தியுள்ளோம். நேற்று ஊர்வலம் ஒன்றையும் நாங்கள் நடத்தியுள்ளோம். எங்களது அண்டை நாடாக, நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உதவி செய்ததில் இந்தியா பெரிய ஒரு பங்கு வகித்தது. அதற்காக நாங்கள் இந்தியாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.