ஏழே வயதில் எத்தனை எத்தனை சோதனைகள்! ஐந்து பாடசாலைகளை விட்டும் வலுக்கட்டாயமாக விலக்கப்படுகிறாள் அந்தக்குட்டிப் பாப்பா.
கடைசியாகக் கற்பித்த டீச்சர் என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா?
"இவள் முழு வகுப்பினருக்கும் ஒரு தொந்தரவாக இருக்கிறாள்!"
"என்ன தொந்தரவு mam?"
"அவளது மேசையைத் திறந்து திறந்து மூடுகிறாள். ஓரிரண்டு முறைகளல்ல. கிட்டத்தட்ட நூறு இருநூறு தடவைகள்! ஒவ்வொரு தடவை மூடித்திறக்கும் போதும் 'கடக் கடக்' என்று சத்தம் கேட்கிறது. அது முடிந்தால், ஜன்னலுக்கருகில் சென்று வீதியில் போவோர் வருவோரையெல்லாம் பேச்சுக்கு இழுக்கிறாள். குருவிகளைக் கூட விட்டுவைப்பதில்லை! "
மூச்சு வாங்குகிறது டீச்சருக்கு.
க்ரிமினல் ரேஞ்சில் குற்றப்பத்திரிகை தயாராகி, விலக்கப்பட்டோம், என்ற செய்தியே தெரியாது கைகளில் ஊஞ்சலாடியபடி வரும் மகளை வீட்டுக்கழைத்து வருகிறாள், அந்த இளம் தாய் , சோ க்ரொயொனகி..
அதற்குப் பின்னர்தான் அவர்களது வாழ்வில் அந்த அற்புதம் நிகழ்கிறது!
'தொமோ' பாடசாலையில் அட்மிசன்!
ரயில்பெட்டிகள் வகுப்பறைகளாகவும், அன்பைக் குழைத்துச் செய்த ஆச்சரிய மனிதர் தலைமையாசிரியராகவும், அதிசயமே அசந்து போகும் புதையல் தீவாக அமையப் பெற்ற தொமோ பாடசாலையில் , நமது குட்டிப் பெண் எந்தவிதப் பிரயத்தனமும் இன்றி உள்வாங்கப்படுகிறாள்.
அதன் பின்னர், 'ஜப்பானின் அதிகம் போற்றப்பட்ட பெண் ஆளுமை', உலகளவில் பிரசித்தம் பெற்ற முதலாவது ஜப்பானிய செலிப்ரிடி, பிரபல நடிகை, சர்வதேச , தேசிய கீர்த்திமிகு விருதுகளின் சொந்தக்காரி, ect ect என்றெல்லாம், புகையிரதப்பெட்டிகளாக நீளும் பன்முகங்களைக் கொண்ட , 'தெத்சுகோ க்ரொயொனகி' என்ற ஆளுமை உருவானது வரலாறு!
1981 ம் ஆண்டு வெளிவந்த, ஜப்பானிலேயே அதிக பிரதிகள் அவசரமாக விற்றுத் தீர்ந்த நூல் என்ற பெருமைக்குரிய, 'தொத்தோ சங்' நூலின் நூலாசிரியை, க்ரொயொனகி! தொத்தோ சங், அவரது பால்யகாலத்துப் பெயர்.
தற்போது, 89 வயதிலும் UNICEF இன் நல்லெண்ணத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டு, பல தசாப்தங்களாக உலகின் குழந்தைகளுக்காக ஆற்றிய அளப்பறிய பணிகளை இன்னும் இன்னும் முடிவிலியால் பெருக்கிக் கொண்டிருப்பவர்.
தெத்சுகோ க்ரொயனகியின் 'தொத்தோ சங்' நூல், முழுக்க முழுக்க அவரது வாழ்வைக் குழைத்துக் குழைத்துப் பண்படுத்திய தொமோ பாடசாலையைப் பற்றியது.
'படிப்பினை தரும் பாடசாலை' என்ற பெயரில், நூலைத் தமிழுலத்துக்குப் பரிசளித்திருப்பவர் யாக்கூத் sir.
தமிழில் நூல் வந்த புதிதில், பாடசாலை மாணவியாக வாசித்துப் பூரித்து, 'தொத்தோ சங்' ஆக மாறிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.
புத்தகத்தில் என்னை அன்று மிகக் கவர்ந்த பகுதி, தொமோ பாடசாலையின் உணவு வேளை.
புகையிரதப் பெட்டிகளிற்கு அப்பாலிருக்கும் கூட்ட மண்டபத்தில் மொத்தப் பாடசாலையும் வந்தமரும்.
"தரையிலிருந்தும் கடலிலிருந்தும் ஒவ்வொரு உணவு கொண்டு வந்தீர்களா ?"
தலைமையாசிரியர் பற்களின் இடைவெளி தெரியக் கேட்பார். பற்றாக்குறை இருப்பவர்களுக்கு sir இன்
மனைவி, தயார் செய்யப்பட்ட தரை, கடலுணவுகளைப் பரிமாறுவார்.
அதன்போது, ஒருவர் முன்வந்து நடுவில் எழுந்து நின்று சுவாரசியமானதொரு கதையைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
நாங்கள் பாடசாலையை விட்டு வெளியேறிய போது, பல்கலைக்கழகம் செல்லும் வரை, இளைஞர் அமைப்பொன்றில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தேன். பாடசாலை மாணவர்களுக்காக பற்பல camp களை நடத்தினோம். ஒருதடவை 'வனம்'/ jungle என்ற concept இல் அத்தனை பிள்ளைகளையும் பலா இலைத் தொப்பியணிந்து, காட்டிலிருந்து ஏதாவது உணவு கொண்டு வரும் படி வேண்டியிருந்தோம் . நாங்கள் குழுவாக, மொத்த லொக்கேசனையும் காட்டுக் கிளைகள் , மலர்களால் அலங்கரித்திருந்ததைப் பார்த்து, குதூகலித்துப் போனார்கள் குழந்தைகள்.
தொமோ பாடசாலையின் தாக்கம், வாழ்வின் எத்தனையோ இடங்களில் இன்று வரை தொடர்கிறது எனக்கு!
வெறும் வாசகியான எனக்கே அப்படியென்றால்,
தெத்சுகோ க்ரொயொனகி,
தனது 'தொமோ நிமிடங்களை' உள்ளத்தில் செதுக்கி வைத்திருந்து, 40 ஆண்டுகளுக்குப் பின் நூலாக்கி உலகுக்களித்திருப்பதில் ஆச்சரியமே இல்லை!
அறுசுவை விருந்துக்குப் பின், சொக்கலேட் ப்ரவ்னி பகிர்வதைப் போல, நூலின் முடிவுரைக்குப் பின், தொமோவில் தன்னோடு ஒன்றாய்ப் படித்தவர்களின் தற்போதைய உயர் நிலையையும் இணைத்திருக்கிறார்!
நன்றி பெண்ணரசியே!
தொமோ வை நிறுவி, அதன் ஒவ்வொரு விதைக்கும் நீரூற்றி, சமயங்களில் மழையாகப் பொழிந்து, சமயங்களில் மிதமான வெயிலாக ஒளிர்ந்து, படிப்படியாகக் கட்டியெழுப்பிய தலைமையாசிரியர், தனது கனவுப் பாடசாலை இரண்டாம் உலகப் போரில் தீக்கிரையாவதை, வீதியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அத்தருணத்திலும் வழமை போலவே , நமது கதாநாயகியைப் பார்த்து
"நீ ஒரு நல்ல பிள்ளை தொத்தோ சங்" என்று கூறுகிறார். வான் வரை வெறுப்பைக் கக்கித் தீர்ந்த அந்தக் கொடிய தீச்சுவாலைகளை விட, அவரது அன்பும் நம்பிக்கையும் மிக மிக வலிமையானதாக இருந்தது.
-ரும்மான்-