(செ.திவாகரன்)

நுவரெலியா தனியார் பஸ் நடத்துனர்கள் கட்டுபாடின்றி கட்டணம் அறவிடுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பயணிகள் போக்குவரத்து தனியார் பஸ் நடத்துனர்களும் முச்சக்கர வண்டி சாரதிகளும் ஒரு கட்டுபாடின்றி கட்டணங்கள் அறவிடுவதாகவும் தனியார் போக்குவரத்து பஸ் நடத்துனர்கள் பற்றுச் சீட்டுகளும் வழங்கப்படுவதுமில்லை. இதனால் நுவரெலியா பயணிகள் பல அசௌரியங்களுக்குள்ளாகுவதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்கமாட்டார்களா? என நுவரெலியா வாழ் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மாதத்தில் ஆகக் குறைந்த கட்டணமாக 42 ரூபா அறவிட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையினரால் தீர்மானிக்கப்பட்ட வேளையில், நுவரெலியாவில் குறுந்தூரம் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துனர்கள் 45 ரூபா முதல் 50 ரூபாவரை அறவிட்டனர். 42 ரூபா கட்டணத்திற்கு 50 ரூபா வழங்கினால் மிகுதி சில்லறை 8 ரூபா வழங்குவதில்லை. மிகுதி சில்லறை கேட்டால் சில்லறை இல்லை எனவும் பற்றுச்சீட்டு கேட்டால் நாங்கள் பற்றுச்சீட்டு அச்சடிக்கவில்லை, பற்றுச்சீட்டு இல்லையெனவும் கடுப்பாக பஸ் நடத்துனர்கள் பதில் கூறுகின்றனர்.

மீண்டும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து ஆகக் குறைந்த தூரம் கட்டணமாக 32 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும் இப்பொழுதும் நுவரெலியாவில் 40 ரூபா முதல் 50 ரூபா வரை அறவிடுகின்றார்கள்.

இதேபோல முச்சக்கர வண்டி வாடகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 100 ரூபா அறவிடப்பட்ட கட்டணம் தற்பொழுது 400 ரூபா முதல் 500 ரூபா வரை அறவிடப்படுகிறது. அதேவேளை, நுவரெலியாவிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளிடம் முச்சக்கர வண்டிசாரதிகள் அதிக கட்டணம் அறவிடப்படுவதாகவும் சுற்றுலா பயணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் பயணிகள் போக்குவரத்து தனியார் பஸ் நடத்துனர்களும் முச்சக்கர வண்டிசாரதிகளும் அரசாங்க போக்குவரத்து சபையினரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலதிகமாக அறவிடுகின்றார்கள். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறு கண்மூடித் தனமாக கட்டணம் அறவிடும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என நுவரெலியா வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.