ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக மோசமான சர்வாதிகார ஆட்சியாளர் என ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் பல்லைக்கழக மாணவர்கள் கூட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

குற்றவியல் விசாரணை திணைக்களம் விடுத்த அழைப்புக்கு அமைய இன்று(20) வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த போதே ஹிருணிகா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 

“என்னை விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு வந்து அழைப்பாணை ஒன்றை வழங்கினர். அதில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. போராட்டம் சம்பந்தமாக என்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவே நினைக்கின்றேன்.

இந்த போராட்டத்தின் புண்ணியத்தில் தான் தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு ரணில் வந்தார். இவ்வாறான நிலையில், போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏதேனும் ஒரு காரணத்திற்காக அழைத்து விசாரணை நடத்துகின்றனர்.

ஆனால் என்னை எதற்காக அழைத்திருக்கின்றனர் என்று போய் பார்ப்போம். காரணம் என்னவென்று அறிந்து நான் எனது வாக்குமூலத்தை வழங்குவேன். ஆனால் எமது போராட்டம் அமைதியாக முன்னெடுக்கப்பட்டது.

எங்களால் எவருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. தொந்தரவு ஏற்பட்டது என்றால், ராஜபக்சவினருக்கே ஏற்பட்டது. அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க நேரிட்டது. சாதகமான நிலைமை ஏற்பட்டது என்றால், அது ரணில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.

அவர் முன்னெடுத்து வரும் இந்த அடக்குமுறையை நாங்கள் அருவருப்புடன் கண்டிக்கின்றோம். வசந்த முதலிகே நேற்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். பயங்கரவாத யுத்தம் 2009 ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. பல்கைலைக்கழக மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது கவலைக்குரிய விடயம்.

இதுவரை உருவான அனைத்து ராஜபக்சவினரை விட, இதுவரை ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளை விட இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ரணில் ராஜபக்ச மிக மோசமான சர்வாதிகாரமான ஆட்சியாளர்” எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.