(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக உஸ்தாத் ஏ.சீ. அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் யாகூத் நளீம் (11) கடந்த வியாழக்கிழமை வழங்கிவைத்தார்.
பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவிற்குப் பின்னர் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.
அந்த வகையில், கலாபீடத்தின் முதல்வராக உஸ்தாத் அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் எனும் பதவி, புதிய கட்டமைப்பின் கீழ் கலாபீடத்தின் தலைமை நிர்வாகப் பதவியாக அமைகின்றது.
அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத், இலங்கை முஸ்லிம் கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.
இலங்கையின் இஸ்லாமிய அழைப்புப் பணியில் காத்திரமான பங்களிப்பினைச் செய்து வரும் இவர், மிகச் சிறந்த பேச்சாளர். இலங்கையின் முஸ்லிம் அறிஞர்களில் முதன் முதலாக தனக்கெனப் பிரத்தியேகமான இணையத்தைக் கொண்டவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத். இஸ்லாத்தின் அதிகார பிரதிகளில் இரண்டாம் நிலையாகக் கொள்ளப்படுகின்ற ஹதீஸ் துறையை தனது சிறப்புத் துறையாகக் கொண்டவர்.
அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத், 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகலை நகருக்கு அண்மையில் உள்ள 'தோரயாய' எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார். மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட இவர், குடும்பத்தில் மூன்றாமவர். 1988ஆம் வருடம் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ஓர் ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தனது ஆரம்பக்கல்வியை தோரயாய அத்தாரிக் முஸ்லிம் வித்தியாலயத்திலும் பின்னர் பக்மிகொல்ல அல்-மினா முஸ்லிம் மகா வித்யாலயத்திலும் தெலியாகொன்ன ஹிஸ்புல்லா முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பவற்றிலும் பெற்றுக் கொண்ட அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், 1976ஆம் ஆண்டு தனது உயர்கல்வியை தொடர்வதற்காக பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் பிரவேசம் பெற்ற இவர், 1983ஆம் ஆண்டு முதற்தர சித்தியுடன் நளீமியா பட்டச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். 1984ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் (வெளிவாரி) பொதுக் கலைமாணிப் பட்டப்பரீட்சையில் 2ஆம் தர உயர் சித்தியடைந்தார். 1994ஆம் ஆண்டு முதுதத்துவமாணி பாடநெறிக்காக தன்னை பதிவு செய்து கொண்ட இவர், 1995ஆம் ஆண்டு அதன் எழுத்துப் பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த நிலையில் உள்ளார்.
இஸ்லாமிய எழுச்சி, சமூகமாற்ற தளங்களில் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களில் பங்கெடுத்துள்ள இவர், தான் முன்வைக்கும் சிந்தனைக்கு முழுப்பொறுப்புள்ளவராக நடந்துகொள்கிறார். இஸ்லாமிய சிந்தனையில் நடுநிலைப் போக்கைக் கடைப்பிடிக்கும் இவர், பிரதான நீரோட்டத்தில் பணிபுரிவதையும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகின்றார். இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையில் இடைவினையாற்றுதல், சகஜீவன நிலை நின்று இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பல்வேறு நாகரிக, மதப் பண்பாடுகளுக்கிடையில் உரையாடல்களை நிகழ்த்துதல் இவரது அக்கறைக்குரிய விடயங்களாகும்.
இஸ்லாமியத்துறையை அதன் நியமங்களுக்கேற்பவும் அந்த நியமங்களிலிருந்து வழுவாமலும் அதற்குரிய ஒழுகலாற்று நடைமுறையை மீறாமலும் கொண்டு செல்லும் இவர், எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அடிநாதமாக விளங்குகின்றது. அதாவது விதிமுறை நோக்கு தவறா பயில்முறையே இவர் கடைபிடிக்கும் நடைமுறையாகும்.
எளிமை, தெளிவு, மரபில் புத்துயிர்ப்பாக்கம், சர்வதேசத்தன்மை இவர் எழுத்திலும் பேச்சிலும் விரவிக்கிடக்கும் ஆளுமைப்பண்புகளாகும்.
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் மாணவப் பருவம் முதலே இஸ்லாமிய அழைப்புப் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இலங்கை இஸ்லாமிய தஃவா களத்தின் முன்னோடி தாஈகளில் ஒருவர். தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையுள்ள இவர், நாடறிந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் தஃவா பயிற்றுவிப்பாளராகவும் அறியப்பட்டுள்ளார். இஸ்லாமிய தஃவா தொடர்பில் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
நளீமிய்யாவின் முத்திங்கள் வெளியீடான இஸ்லாமிய சிந்தனையின் முன்னாள் நிர்வாக ஆசிரியரான இவர், தற்போது அதன் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். தேசிய நாளிதழான தினகரனிலும் இவரது கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. இவர் இஸ்லாமிய சிந்தனையில் தொடராக எழுதிய ஹதீஸ் விளக்கம், பிக்ஹுஷ்ஷரிஆ, வானொலி முஸ்லிம் சேவை உரைகள் பின்னர் நூல்களாக வெளிவந்துள்ளன.
இஸ்லாமிய சிந்தனைத் தெளிவை வழங்கும் வகைளில் இவர் எழுதியுள்ள நூல்களான நபிவழி 1,2, சன்மார்க்க சட்டவிளக்கம், இஸ்ரா, மிஃராஜ் ஒரு புதிய பார்வை, கல்வி, கற்றல், கற்பித்தல் இஸ்லாமிய நோக்கு, ஹலால், ஹராம் விதிமுறைகளும் உணவு, உடை வரையறைகளும், நாளும் ஓத நபிகளாரின் திக்ருகள், நபிவழி, சன்மார்க்க சட்டவிளக்கம், கல்வி கற்றல் கற்பித்தல் ஆகிய நூல்கள் வாசகர் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் பல பதிப்புக்களையும் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எமது ஆசிரியர் குழுமம் சார்பாக நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.