அரகலய போராட்டக் குழுவின் முன்னணி செயற்பாட்டாளர்களுள் ஒருவரான தானிஷ் அலி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் போது கைத்தொலைபேசியை பயன்படுத்தியதற்காக 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெளிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பரகஹதெனியவைச் சேர்ந்த தானிஷ் அலி, துபாய்க்குச் செல்ல முற்பட்டபோது விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது தொலைபேசியை பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொண்ட பின்பே 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
தானிஷ் அலி குருநாகல் பரகஹதெனியாவைச் சேர்ந்த ஒரு எம்.பி.ஏ பட்டதாரியாவார். ஒன்றரை வருட குழந்தையின் தந்தையான இவர், கால்ப்பந்தாட்ட விளையாட்டுத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒருவராவார். அது தொடர்பாக வெப்தளம் ஒன்றை நடாத்தி வருகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும்போது கால்ப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவது தொடர்பாக பேட்டி கண்டு எழுதியிருந்தார். இவர் யூடியூப் ஒன்றை நடாத்தி வருகிறார்.
இதேநேரம் கடந்த 27ஆம் திகதி வெளியான அரச சிங்களப் பத்திரிகை ஒன்றில் தானிஷ் அலி பற்றி குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து பலத்த விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியைக் கொண்ட இவர், அரசியல் மற்றும் கால்ப்பந்து விளையாட்டில் ஈடுபட்டவராவார். இவரது தந்தை ஒரு தமிழராவார்.
1980இல் திருமணமான பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
பரகஹதெனிய பிரதேசத்தில் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு குடும்பமாக பொலிஸாரால் அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ரூபவாஹினி தொலைக்காட்சி சேவைக்கு அத்துமீறிப் பிரவேசித்து நிகழ்ச்சிகளை இடைநிறுத்தியதற்காகவே இவர் கைது செய்யப்பட்டார்.