வில்பத்துவை அண்மித்த காடுகளை வெட்டியமை தொடர்பில் தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஜனவரி 19ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
காமினி அமரசேகர, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய விசாரணையின்போது, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் தற்போது அங்கம் வகிக்கும் அர்ஜுன ஒபேசேகரவும் ஒருவராக இருந்ததால் இந்த மனு மீதான பரிசீலனையை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு அனுப்பி வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மனுவை ஜனவரி 19 ஆம் திகதி பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.