நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்ததன் பின்னர் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இதனை பிறப்பித்துள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஆகஸ்ட் 23 ஆம் திகதி நீதவான் நிஷாந்தவினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் நீதவானின் பிணை வழங்கல் நடவடிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
பிணை வழங்கும் நடவடிக்கையினால் சட்டவாட்சி சீர்குலைந்துவிடும் என தாம் வலியுறுத்தியதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இது நீதித்துறைக்கு பாரிய அவமதிப்பு எனவும் கூறியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், பிரதிவாதி சனத் நிஷாந்தவை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.