இலங்கைப் பாராளுமன்றத்தினால் பல்கலைக்கழகங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குறுகியகால பாடநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. இவ்வாறான  குறுகியகால பாடநெறியொன்றை ஆரம்பித்தமை குறித்து நன்றி தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, பாடநெறியைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு சிறு விரைவுரையொன்றையும் நிகழ்த்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் ஊடகத்துறை மாணவர்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறிக்கான வளவாளர்களாகப் பாராளுமன்ற செயலகத்தின் உயர் அதிகாரிகள் இணைந்துகொள்வர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா, நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சணராணி, ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய, ஊடக அதிகாரி நுஸ்கி முக்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் குறுகியகால பாடநெறியை தமது பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கும் நடத்துமாறு இங்கு கருத்துத் தெரிவித்த கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ரகுராம், ஊடகக் கற்கைகள் துறையின் விரிவுரையாளர்களான பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், அனுதர்ஷி கபிலன், யூட் டினேஷ் கொடுதோர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தப் பாடநெறியின் ஊடாக ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடைமுறைகள், பாராளுமன்ற அமைப்பின் பரிணாமம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை, நிலையியற் கட்டளைகள், பொதுமக்கள் சேவைச் செயற்பாட்டுக்கான தொடர்பு, பெண்கள் பிரதிநிதித்துவம் போன்ற விடயதானங்கள் குறித்து புரிதல்கள் என்பனட வழங்கப்படவுள்ளன. பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான பாடநெறியில் நான்கு விரிவுரைகள் மற்றும் பாராளுமன்ற சுற்றுப்பயணம் என்பன உள்ளடங்கியுள்ளன.

இலங்கைப் பாராளுமன்றம் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் இறுதியாண்டு பட்டதாரி மாணவர்களுக்காக இவ்வாறான குறுகிய பாடநெறியை முதன் முதலில் ஆரம்பித்திருந்தது.

இந்தப் பாடநெறிக்கான ஒருங்கிணைப்பை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.