2வது டெஸ்ட்டில் 145 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட தொடங்கிய இந்திய அணி 37 ரன்களுக்கே 4 பெரிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 


இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் அடித்தது. அந்த அணியில் மோமினுல் ஹக் மட்டுமே சிறப்பாக ஆடி 84 ரன்கள் அடித்தார். உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ராகுல் (10), ஷுப்மன் கில் (20), புஜாரா(24), கோலி (24) ஆகிய நால்வரும் சொதப்ப, அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய நிலையில், ரிஷப் பண்ட் 93 ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் அடித்தது 

87 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் மற்றும் தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். லிட்டன் தாஸ் 73 ரன்களும், ஜாகிர் ஹசன் 51 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் டஸ்கின் அகமது மற்றும் நூருல் ஹசன் ஆகிய இருவரும் நன்றாக ஆடி தலா 31 ரன்கள் அடித்தார். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. 

வங்கதேச அணி 144 ரன்கள் முன்னிலை பெற, 145 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்ட தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுலை 2 ரன்னுக்கு ஷகிப் அல் ஹசன் வீழ்த்த, அதன்பின்னர் புஜாரா (6) மற்றும் ஷுப்மன் கில்(7) ஆகிய இருவரையும் மெஹிடி ஹசன் ஒற்றை இலக்கத்தில் வீழ்த்தினார். விராட் கோலியும் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, வெறும் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

145 ரன்கள் என்ற சாதாரண இலக்கை, இந்திய அணியின் 4 விக்கெட்டை விரைவில் வீழ்த்தி சவாலான இலக்காக மாற்றியுள்ளது வங்கதேச அணி. அக்ஸர் படேல் 26 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை. ஆனால் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருப்பதால் அவசரப்படாமல் மிகக்கவனமுடன் ஆடினால் தான் இலக்கை அடிக்க முடியும்.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.