இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி புனேவிலும், கடைசி டி20 ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கு இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுலுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம்.

இதேபோன்று டி20 இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச சுற்றுப் பயணத்தில் காயம் காரணமாக இடம்பெறாத பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இவ்விரு வீரர்களும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. அந்த வகையில் இலங்கை தொடருக்கு எதிரான இந்திய அணியின் அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த தொடரை பார்க்கலாம். இதேபோன்று டிடி ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இந்தியா – இலங்கை தொடரை பார்த்து மகிழலாம்.

டி20 போட்டியில் இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 17 முறையும், இலங்கை 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எடுக்கப்படவில்லை.

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் இரு அணிகளும் 162 முறை விளையாடியுள்ளன. இதில் இந்தியா 93 முறையும், இலங்கை 57 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 11 ஆட்டங்களில் முடிவு எடுக்கப்படவில்லை

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.