அன்புள்ள தம்பி, தங்கையரே!

உங்கள் மீது பாசமும், கரிசணையும் கொண்ட ஒரு அண்ணனாய் நான் எழுதும் மடல்...

எனக்கு உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் இல்லை என்பதால், உங்களை எல்லாம் என் உடன் பிறந்த உறவுகளாய் எண்ணி ஏற்று, மனம் திறந்து பேச ஆசைப்படுகிறேன்.

போதைப் பொருட்களின் வாடைக் காற்று உங்கள் மீது பட்டுவிட முன், இந்த அண்ணனின் வரிகளைக் கொஞ்சம் படித்திடுங்கள்.

1. உங்களுக்குத் தெரியாத நபர்களை விட, உங்களுடன் நெருக்கமாய்ப் பழகும் நண்பர்களும், உறவினர்களுமே போதைப் பொருட்களையும், ஏனைய தவறான விடயங்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு அதிகம். எனவே உங்களுடன் நெருங்கிப் பழகும் நண்பர்கள் விடயத்தில் அவதானமாயிருங்கள். கூட இருந்து குழி பறிக்கும் நண்பர்களுடன் கூட்டுச் சேராதீர்கள். 

புதிதாய் உங்களுடன் நட்பு பாராட்ட விழையும் நபர்கள் விடயத்தில் விழிப்பாயிருங்கள். வயதுக்கு மூத்த நண்பர்களை தவிர்ந்து கொள்ளுங்கள். நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். மோசமான பழக்கங்களையுடையவன் என்று தெரிந்து கொண்டும், ஒருவனை நண்பன் ஆக்காதீர்கள்.

2. உங்கள் நண்பர்கள் தவறான வழியை நோக்கிப் பயணிப்பதை நீங்கள் கண்டால், அவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுங்கள். அவர்களது தவறுகளை மறைப்பதில் பங்காளியாகி அவர்களது எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள். அவர்களது பெற்றோரிடம் விடயத்தை தெரியப்படுத்துங்கள்.

3. உங்கள் நண்பர்களோ, தெரிந்தவர்களோ உங்களிடம் அறிமுகப்படுத்தும் எந்தவொரு உணவு விடயத்திலும் அவதானமாயிருங்கள். அதன் உள்ளடக்கம் என்ன என்பதை நன்கு விசாரித்தறிந்த பின்னர் அதனை உட்கொள்ளுங்கள். சந்தேகத்திற்கிடமான பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ந்திடுங்கள்.

4. தவறான விடயமொன்றை யாரேனும் ஒருவர் உங்களுக்கு அறிமுகம் செய்யும் போது, அது தவறெனத் தெரிந்தால் அதனை மறுத்து விடுங்கள். அதனை அறிமுகம் செய்பவர் உங்கள் உற்ற நண்பனாக அல்லது உறவினராக இருந்தாலும் சரியே. "இல்லை" என்பதை அழுத்தமாகச் சொல்லப் பழகுங்கள்.

5. தவறான விடயமொன்றை யாரேனும் ஒருவர் உங்களுக்குத் திணிக்க முயற்சிக்கும் போது, அதனை உடன் ஏனையோருக்குத் தெரியப்படுத்துங்கள். குறிப்பாக உங்களைப் பராமரிக்கும் பெற்றோர் மற்றும் உற்றோருக்கு உடன் தெரிவியுங்கள். திணிப்பவர் உறவினர் அல்லது நண்பர் என்பதற்காக அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். 

6. உங்கள் வாழ்க்கைக்கென இலட்சியமொன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் இறைவன் நாடினால் உங்கள் வாழ்வில் எவற்றையெல்லாம் சாதிப்பீர்கள் எனப் பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியலை எழுதி உங்கள் படுக்கையறைச் சுவரில் ஒட்டிக் கொள்ளுங்கள்  தினமும் தூங்கச் செல்லும் போதும், தூங்கி எழும் போதும் அந்தப் பட்டியலை வாசியுங்கள். 

7. எந்தவொரு புதிய விடயத்தைச் செய்யும் போதும், உங்கள் இலட்சியங்களை ஒருமுறை மீட்டிப்பாருங்கள். நீங்கள் செய்யப் போகும் அந்த விடயம், உங்கள் இலட்சியங்களை அடையத் துணை புரியுமா அல்லது தடையாய் அமையுமா என மூன்று முறை சிந்தியுங்கள்.

8. உங்கள் மூளை 25 வயதில் தான் சுயமாய் முடிவெடுக்கத் தயாராகின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவரை சுயமாக முடிவெடுப்பதை இயலுமானவரை தவிர்த்திடுங்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கண்டிப்பாய் ஒரு தகுதியான, நல்ல பெரியவரிடம் ஆலோசனை பெறுங்கள். 

உங்களுக்கு ஒரு அண்ணனாக ஆலோசனை வழங்க நான் தயார். என்னைப் போல் உங்கள் மீது அக்கறை கொண்ட, நீங்கள் எதிர்காலத்தில் சிறப்படைய வேண்டும் என எதிர்பார்க்கின்ற பல அண்ணன்கள் தயாராய் இருக்கின்றனர். 

தொடர்பு கொள்ளுங்கள்!

தயவு செய்து போதை எனும் அரக்கன் உங்கள் எதிர்காலத்தை அழித்துவிட அனுமதித்து விடாதீர்கள்!

தன்னைச் செப்பனிட உங்கள் கரங்களின் பங்களிப்பை உலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது; உலகினதும், உங்கள் பெற்றோரினதும் எதிர்பார்ப்புக்களை சுக்குநூறாக்கி விடாதீர்கள். 

நாளைய உலகின் தலைவர்களாகி, எங்களை வழிநடாத்த வேண்டியவர்கள் நீங்கள்; உங்களைப் புனர்வாழ்வு நிலையங்களிலும், மயானங்களிலும் பார்க்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்!

உங்கள் அண்ணன்,

தில்ஷான் நிஷாம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.