சர்வதேச மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தினம் கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது....


சர்வதேச மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மகா வித்தியாலய  விளையாட்டு மைதானத்தில் விசேட நிகழ்ச்சி ஒன்று அண்மையில் (04) இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை ஊக்குவித்து மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்.


ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 4 ஆம் திகதி சர்வதேச மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நோக்கத்திற்காக, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை உள்ளடக்கிய பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான இறுதி மூலோபாயத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதுவரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 204 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து ஆளணிக்கு எதிரான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 15 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் என தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கண்ணிவெடி அகற்றலுக்கு பங்களிக்கும் இலங்கை இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி (ஆண்கள்) மற்றும் கயிறு இழுத்தல் போட்டி (பெண்கள்) இங்கு நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி மழையால் தடைபட்டதால், தகுதி பெற்ற இரு அணிகளுக்கு இணை சாம்பியன்ஷிப்பை வழங்க ஏற்பாட்டுக் குழு முடிவு செய்தது. இதன்படி, இலங்கை இராணுவத்தின் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் அலகுகள் அணியும், டேஷ் நிறுவன அணியும் இணைச் சம்பியன் பட்டத்தை வென்றன. மேலும், கயிறு இழுத்தல் போட்டியில் டாஷ் நிறுவன அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி) டபிள்யூ.எம். ஆனந்த, கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் திரு.மோகனன், தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வீ. பிரேமச்சந்திரன், கிளிநொச்சி உப அலுவலகத்தின் பிரதானி தில்ஹான் இந்தமல்கொட, இலங்கை இராணுவத்தின் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் அலகின் பிரதம அதிகாரி (2) மேஜர் ரஜித அம்பலன்பிட்டிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.