ஜமாலிய்யா மெய்ஞ்ஞான விளக்கம்!
சற்குரு ஜமாலிய்யா சையது கலீல் அவுன் மௌலானா இபுனு யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹூசைனிய்யுல் ஹாஷிமி அவர்கள் இந்த பரந்த உலகில் மக்களுக்கு இலங்கை நாடு தந்த மாபெரும் ஞான சிகரம் ! வலிகமாவில் இருக்கும் இவர்களுக்கு உலகின் பல் வேறு நாடுகளில் சீடர் பெருமக்கள் இருக்கிறார்கள் ! மனித நேயம் , சமரசம் , மதங்களிடையே மக்களிடையே ஒற்றுமை , மதநல்லிணக்கம் இவற்றோடு இரத்தினங்களை ஒத்த ஞான விளக்கங்களையும் அருளிவருகிறார்கள் ! அரபி , ஆங்கிலம் , தமிழ் , சிங்களம் இப்படி பல்வேறு மொழிகளில் வித்தகரான இவர்கள் , எழுதிய நூல்கள் நூற்றை தொடும் ! தமிழில் ஏரளாமான இலக்கிய, ஞான பாடல்களை தந்த இவர்கள் இந்த காலத்தில் வாழும் சித்திர கவியும் படைத்திருக்கிறார்கள் ! அவர்களின் 88 வது பிறந்த விழா ஷவ்வால் பிறை 16 , மே 7 ந் தேதி உலகமெங்கும் அவர்கள் சீடர்கள் , பக்தர்கள் என்னும் ஆஷிக்குகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் ! அவர்களின் அற்புத கட்டுரை இதோ !
சற்குரு ஜமாலிய்யா செய்யிது கலீல் அவுன் மௌலானா நாயகம் அவர்கள் கடந்த 29-11-1978 அன்று மாலை 5-15 மணிக்கு அகில இந்திய ரேடியோவில் ஆற்றிய சொற்பொழிவு.
ஆதியில் ஒன்றாய், அஃது இஃது என்றிலதாய், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியனவற்றைக் கடந்ததாய், அருவமாய், அவ்வியக்தமாய்ப், பரவியும் விரவியும் விளங்காநின்ற பரம இரகசியமாக சிற்சோதியாம் வித்தானது தன்னிரகசியத்தை வெளியிடத் தத்தம் கொண்டமையின் அது விஷமப்படத் தொங்கிப் பனரெனவும் இலையெனவும் பூவெனவும் காயெனவும் வேரெனவும் விகாரப்பட்டாற் போன்று அணு போற் கண்ணுக்குப் புலப்படாப் பொருளாயும் பஞ்ச பூதங்களாய், ஏனைச் சிருட்டிப்பொருள்களாய்ச், சராசரங்களாய்க், கண்ணுக்குத் தென்படும் பொருளாயும் இயங்கா நிற்குமதுவே சர்வசத்தான இறையாகும்.
ஆதியில் அருவமாய் மாறிலாப் பிரணவமாய் அமைந்த நாம் சங்கற்ப விகற்பங்கள் காரணமாய் உருவெடுத்த தனிமித்தம் நித்திய அநித்தியப் பொருள்களையும் சத்திய அசத்தியங்களையும் விளங்கிக் கொள்ளாது மாயையிற் சிக்கி, மதிமயங்கி, தன்னையறிந்து தன்முதனிலையை யறியாது உலகாசாபாசங்களிற் கட்டுண்டு உழல்கின்றோம்.
எவன் தன்னை யறிந்தானோ அவன் தன் இறைவனை அறிந்தான் என்று நபிகள் நாயகம் திருவாய் மலர்ந்துள்ளார்கள். மேலும்,
உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.
அதாவது: ஐம்பூதங்களாலான உடலின் கண் ஏற்படும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் முதலாம் ஐந்தவத்தைகளையும், செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை முதலாம் அறுவகைக் குற்றங்களையும் வலிமை மிக்க மாயையையும் மீதியுள்ள நீக்கத் தக்கதான கேவல பாசமான சகசமல மெனும் ஆணவ மலத்தையும் அருள் கொண்டு துடைத்துப் போக்கி உறுதியாகத் தன்னை யுணர்ந்த தலைவனாகிய இறைவனையுறுதல் சைவ சித்தாந்த நெறியாகும் என்பதும் பெருமை பொருந்திய திருமந்திரக் கருத்தாகும்.
""""தன்னையறிந்து
தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின்னாசை யேதுக்கடி-குதம்பாய்
பின்னாசை யேதுக்கடி""
என உணர்த்தும் குதம்பைச் சித்தர் பாடலும் கவனித்தற்பாலது.
எக்கலையைக் கற்று எந்நிலையடைந்த போதும் நாம் நம்மை யறியும் கலையாகிய ஞானக் கலையை யறிதல் மிக அவசியமாகின்றது. ஞானமே நம்மைப் பூரண மனிதராக்க வல்லது. ஞானமே சர்வ ஆசாபாசங்களிலிருந்தும் நம்மை நீக்கிக் கொள்வது.
ஒவ்வொன்றனுக்கும் உட்கருத்து, புறக்கருத்து என இருபகுதிகள் உள. வேதமும் இவ்வாறே இரு கருத்துக்களையுடையது. இவற்றைக் கர்மம், ஞானம் என வகுக்கலாம். கர்மம் வெளிக் கருத்தையும், ஞானம் உட்கருத்தையும் வழங்கி நிற்பன. இவற்றை நான்கு படிகளாகப் பகுத்து அறபி மொழியில் சரீஅத், தரீகத், ஹகீகத், மஹ்ரிபத் எனவும், தமிழில் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனவும் கூறுகின்றோம். வெளிப்படை வேத அநுட்டானங்களான கர்மங்களை மட்டும் செய்துவரும் கர்மயோகிகளான நம்மிற் பலர் சரியை வழியாகிய வெளிப்படைக் கருத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாவர். இவர்களோ வெனில் பிரவிருத்தி தர்மத்தை மட்டுமே பின்பற்றிச் செல்வோராவர். இன்னவர்கள் இதன் மேற்படிகளான உட்கருத்துக்களை உணர்த்தும் கிரியை, யோகம், ஞானம் முதலாம் படிகளும் உண்டு எனவும் அவற்றை அடைவதன் மூலமே மோட்சமுண்டு என்பதையும் நன்குணர்தல் வேண்டற்பாலது.
மாந்தரிடத்தே தேவ, அசுர குணங்களெனும் இருவகைக் குணங்கள் உள. இவை ஒன்றோடொன்று பொருது ஒன்றையொன்று ஜயிக்க முயல்கின்றன. அசுர குணங்களையுடைய இந்திரியங்கள் ராஜஸ தாமத குணங்களையுடையன. தேவ குணங்களையுடைய இந்திரியங்களோவெனில் சாத்வீகக் குணத்தையுடையன. ராஜஸ, தாமத குணங்கள் அஞ்ஞானத்தால் உண்டாவன. மேலும், ஆன்மா இருவகைப்படுவன. அவை, சீவான்மா, பரமான்மா என்பனவே. அவை இரண்டனுக்கும் நெருங்கிய தொடர்புண்டெனினும் பரமான்மா பரிசுத்தமுடையதாயும் சீவான்மா அஞ்ஞானத்தின் பயனாய் காம, குரோத, உலோப, மோக, மத மாற் சரியங்களென்னும் உட்பகைகளை வளர வைக்கின்றதாயும் இருக்கின்றன. மேலும், ராஜஸ, தாமத விருத்திகளால் பலப்படுத்தப்பட்ட இந்திரியங்களால் சீவான்மா வசப்படுத்தப்பட்டுத் தன் சுயரூபத்தை விட்டகன்று விடுகின்றனது. நாம் நமது நிஜரூபத்தைக் காண வேண்டின் நம் உட்பகைகளையும் ஐம்புல நுகர்ச்சிகளையும் நீக்குதற் பொருட்டு ஞானம், வைராக்கியம் ஆகியவைகளைத் திடமாய்க் கொண்டு ஆத்தும வித்தையில் உள்ளத்தைச் செலுத்தி இல்லறத்திற் துறவறம் பூண்டு பிரவிருத்தி மார்க்கத்தை விட்டு கர்மாதி காரியங்களை ஒழித்து நிவிருத்தி மார்க்கத்திற் சேரல் வேண்டும். இதுவே அத்துவைதமாகும். இதுவே அறபு மொழியில் தௌஹீத் எனக் கூறப்படும்.
மக்களாய நமக்கு மாந்தரெனும் சிறப்புமிக்கதொரு பெயருமுண்டு. மாந்துதல் எனும் சொல் உட்கொள்ளுதல் அல்லது அடக்கிக் கொள்ளுதல் எனும் கருத்துடையது. இவ்வாறே பஞ்சேந்திரியங்களையும் சிறப்புற அடக்கிய முனிவர்களை ஐந்தடக்கிகளெனவும் கூறுவர். இப்பெயர், நான்கு கால்களையும் தலையையும் தன்னோட்டினகத்தே அடக்கிக் கொள்ளும் ஆமைக்குமுண்டு. எனவே மாந்தர் என்பதற்குத் திருமறைக் கருத்துக்களைச் செம்புலனாலறிந்து உட்கொள்ளும் சீர்மையுடையவரென்பதுவும் ஐம்புலன்களையும் அடக்கியாளும் திறமை வாய்ந்தோர் என்பதுவும் சிறந்த கருத்துக்களாவன. இறைவனோ வெனின் அனைத்தையும் வேற்றுமையறப் பற்றி நின்றவனெனினும் பற்றற்றவன். அத்தகைய அப்பரம பொருளின் அங்கங்களாயுள்ள நாமும் எதனையும் பற்றாதிருக்க முடியாதெனினும் ஓடும் புளியம் பழமும் போலிருத்தல் அவசியமே. இஃதே இல்லறத் துறவு என்க.
""""பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"".
என்பது பொய்யா மொழி. அனைத்துப் பொருளையும் பற்றி நின்று பற்றறுத்த இறையோன் வகுத்த நன்னெறியாம் வீட்டின்பத்தை விருப்புடன் உள்ளத்துட்கொள்க ஏனைப் பொருள்களிலுள்ள பற்று நீங்குதற்கு பற்றிய பற்றுடன் தியான சமாதிகளை உளமாரச் செய்க, என்பதிதன் கருத்து. மேலும்,
""""அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு""
எனத் திருவள்ளுவர்ப் பெருந்தகை கூறிப் போந்தாற் போன்று வீட்டின்பமாகிய முத்தியையடைய விரும்புவோர், அதனையடைய விடாது தடுத்தாற் கொள்கின்ற ஐம்பொறிகட்குரிய ஓசை முதலாம் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்தல் வேண்டும். ஐம்புலனடக்குங்கால், அவற்றினை நுகர்தற்பொருட்டு, முன், நுகர்ந்த பொருள்களனைத்தையும் ஒரே விடுத்தமாய் விட்டுவிடல் வேண்டும். எனவே, முற்கூறினாற் போன்று நாம் பரம வைராக்கியம் கொண்டு ஆத்தும வித்தைகளான தியானம் முதலியவைகளில் உளம் நாடி இல்லறத்திற் துறவறம் பூண்டு கொண்டாலன்றிப் பரம ஞானம் பெற்று முத்தி பெறல் இயலாததாகும்.
எனவே, மேற்கண்ட அத்வைத மார்க்கத்தில் புகுந்தோர் அறியாமை அல்லது அஞ்ஞான மென்னும் மயக்கத்தினின்றும் தெளிவு பெறுவர். மகான்கள் வழிநடந்து அன்னவர்கள் போதனைகளை அமுதெனயேற்று அவற்றாலும் யோகப் பயிற்சிகளாலும் உண்மையறிந்து பற்றினின்றும் வல்லே நீங்கி விடுவர்.
யான், எனது என்னும் இருவகைப் பற்றும் அஞ்ஞானத்தால் ஏற்படுவன. அவை அற்றுப் போவதாற் சுயநலமற்று பிறர்நலம் பேணும் தன்மை தன்னிலுண்டாகும். தனக்கொரு சக்தியில்லாதிருக்கத் தானெனுஞ்செருக்கும், தனக்கொரு பொருளில்லாதிருக்கத்தனதென்னும் தருக்கும், இஃது எனது உரிமை என உரிமை கொண்டாலும் அஞ்ஞானமேயாகும். அனைத்தும் ஒன்றெனவும் அனைத்துப் பொருள்களும் அவ்வொன்றின் அங்கங்களெனவும் தன்னுடல், பொருள், ஆவி யாவும் எதனால் ஆட்டியசைக்கப்படுகின்றதோ அதற்கே இவையெல்லாம் உரித்து எனக்கொள்தலும் அதனடி நாம் சரண் எனக் கொண்டுய்தலும் மெய்ஞ்ஞானப்பேரின்பமாகும்.
""""யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்""""
அதாவது, தனக்கே உரித்தல்லாத யாக்கையை யானெனவும், தனக்கே உரித்தல்லாத பொருளை எனதெனவும் கருதி அதனால் உண்டாகும் ஆனவமாகிய மயக்கத்தினை நீக்கி விடுபவன் வானவரும் எய்தற்கரிய வீட்டின்பத்தை எய்துவன் என்பது திருவள்ளுவர் நாயனார் கருத்து.
""""தாவார மில்லை
தனக்கொரு வீடில்லை
தேவார மேதுக்கடி-குதம்பாய்
தேவார மேதுக்கடி"".
மற்றவர்களின் துன்பத்திலே நமக்குப் பங்கில்லை எனும் சுயநலச் செருக்கும், தனக்கெனக் கூறிக்கொள்ளும் ஆணவப் பெருக்கும், உள்ளத்துள் ஒரு போதும் விடுபடாதிருக்கத் தேவாரம் பாடி உள்ளத்துள் இறையன்பு நிறைய விருப்ப தெனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதனால் யாதுபயன் எனக் குதம்பைச் சித்தர் விதந்தோதுகின்றார்.
இவ்வாறு இந்திரிய நுகர்ச்சிகளை நீத்துத் தன்னை மறந்து தான்அகண்டாகாரவடிவெய்திய வெட்ட வெளி யெனக் கருதலும், அதுவே தனது மெய்யெனக் கொள்ளலும் இரண்டறக் கலக்கும் வழியாகும். இதனையே குதம்பைச் சித்தர் கீழ்வருமாறு கூறுகின்றார்.
""""வெட்ட வெளிதன்னை
மெய்யென் றிருப்பார்க்கு
பட்டய மேதுக்கடி-குதம்பாய்
பட்டய மேதுக்கடி"".
வெட்ட வெளியானது பரந்து விரிந்து ஆதி அந்தமற்று விளங்குவதால், மானிடன் தானே தன்னை வெட்டவெளியில் மாய்த்து, வெட்ட வெளியே தன் மெய்யான காலை தன்னைத் தானே பகிரங்கப்படுத்த வேண்டியதோர் அவசியமில்லை, என்பது இதன் கருத்து.
மானிடர் உலகத்தில் வாழும்போதே மெய்ப் பொருளைக் கண்டு அதனுடன் வேற்றுமையற விரவிக்கலந்து ‘தானே காணும் பொருள்களாயும் காணாப் பொருள்களாயும், வெட்டவெளிபோல் அருவமாய் விளங்கி நிற்றலே உச்சிக்கு மேற் சென்று உயர் வெளி காணும் உயர் நிலையாகும். இன்னவர் உலகத்தே வாழ்ந்தபோதும் இறந்தார்க்குச் சமனாவார். இதனாலே நபிகள் பெருமானார் அவர்களும், """"இறக்குமுன் இறந்து விடு"" என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.
""""செத்தாரைப் போலத்
திரியுமெய்ஞ்ஞானித்
கைத்தாள மேதுக்கடி - குதம்பாய்
கைத்தாள மேதுக்கடி"".
என்றார் குதம்பைச் சித்தரும். இதன் பொருள்: இறந்தவரைப்போல் ஆசாபாசங்களனைத்தையும் நீக்கி இது தனதுடலல்ல. எப்பொருளும் தனதல்ல எதற்கும் தனிச் சக்தியில்லை. அனைத்தும் இறையினின்றும் வெளியானவையே, அனைத்தும் அதற்கே சொந்தம், அனைத்துமதுவே, அஃதல்லாததில்லை, யாங்கும், யாண்டும் நிறைந்த ததுவே, யான்வேறு அது வேறல்ல, எனும் உத்தம நிலை நின்று உடல்மட்டுமே அலைந்து திரியும் மெய்ஞ்ஞானிக்குத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளக் கைத்தாளமே தேவையில்லை என்பதாகும்.
உள்ளத்திற் களவு கரந்து, புலணுணர் வறுந்து, சத்திய அசத்தியங்களை அறிந்து, நித்திய அநித்தியங்களைத் தெரிந்து, மேற்கண்ட பற்றறுத்து உண்மை தெளிந்து, விரிந்து பரந்த அருவ உருவங்களில் நிறைந்து, தம்மை ஏய்க்கும் பொருள்களை மறந்து, அனைத்திலும் நான், நீ அவன், இவன் அது இது, எனும் பேதங்கள் ஒழிந்து, வெட்ட வெளிபோல் காண்பனவற்றிலும் காணவியலாதவற்றிலும் கலந்துறைந்து எது நிரந்தரம் என்பதை யுணர்ந்து தன்னைத் தானே தன்னிற் கண்டு வாழும் மெய்ஞ்ஞானியே ஹதீஸில் """"ஹுவல் ஆன கமா கான"" - இப்பொழுது அவன் அதாவது இறைவன், முன்னிருந்தது போல் எனக்கூறும் அருங்கூற்றை உள்ளபடி உணர்ந்தவராவார். இப்பொழுது அவன் முன்னிருந்தது போலாயின் அப்பொழுதும் அவன் இப்பொழுது இருப்பது போல்வான் என்பது தெளிவுறும்.
""""தத்துவமசி"" எனும் மகா வாக்கியமும் இதனையே சம்பூரணமாய் விளக்குகின்றது.
""""துவந்தத் தசியே தொந்தத் தசியும்"" எனத் திருமந்திரம் கூறுகின்றது. இவற்றின் கருத்து """"அது நீ ஆகின்றாய்"", அல்லது, """"நீ அது ஆகியிருக்கின்றாய்"", என்பதாகும்.
""""தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்"""" எனத் திருமந்திரம் எடுத்துரைக்குமாப் போலும் """"தத்துவமசி"" என்னும் மகாவாக்கியப் முப்பதக் கருத்துடையது. எனவே, """"தத்துவமசி"" என்பது. தத்-துவம்-அசி எனவும், துவம்-தத்-அசி எனவும், அதுவே, தொம்-தத்து-அசி எனவும் நின்று, தொம்பதம்-தற்பதம்-அசிபதம் என அரும்பொருள் அள்ளி அருளி நிற்கின்றது காண்க. தத் என்பது தற்பதாய் நின்று அது என்னும் பிரமத்தையும், துவம் என்பது தொம் பதமாய் நின்று நீ என்னும் கூடத்தான் எனும் பரப் பிரமத்தையும், அசி என்பது அசிபதமாய் நின்று ஆகியிருக்கின்றாய் எனவும் கருத்துக் கொடுக்கிறது. தற்பத நிலையானது தன்னையும் தன் தலைவனையும் அறிந்த நிலையாகும். இதனைத் தனக்குத்தானாய் அல்லது தன்னிற்றனாய் இருக்கும் நிலை எனலாம். தொம் பதம் என்பது நீ, நான் எனத் தோன்று நிலை எனலாம். அசிபதம் என்பது இறைவனும் சீவனும் ஒன்று கூடும் ஐக்கிய நிலை எனலாம். இதுவே, இரண்டறக்கலக்கும் நிலையாகும். இதை அறபு மொழியில் """"விஸால்"" என்போம். இம்முத் தரங்களை, அ-உ-ம ஒன்று சேர்ந்த ‘ஓம்’ எனும் சூக்குமப் பிரணவம் என்போம். இதனையே அறபு மொழியில் ‘ஹூ’ எனக் கூறுகின்றோம். இறையில் ஐக்கியப் படலும் அதனிமித்தம் இன்பத்தையடைதலும் சீவமுத்தர்களாப் பிரகாசித்தலுமே மானிட ஜன்மம் பெறற்கரிய பெரும் பேறாகும். இதற்காகவே பிரம்ம ஞானமாகிய ஏகத்துவ ஞானம் உத்தம புருடர்களுக்கு அருளப்பட்டது. அனைவரும் இவ்வருளொளியைப் பெறுவதனால் மருணீக்கப்பட்டு ஞான சம்பந்தமுடைய உத்தமர்களாய் வாழ்வார்களாக. எங்கும் மெய்ஞ்ஞானம் பரவி வையகத்தார் மெய்யகம் பெறுவார்களாக. ஞானப்பிரகாசம் அடைவார்களாக.
(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)