நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கான தேசிய முன்மொழிவொன்றைத்
துரிதமாக தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு பணிப்புரை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை   விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  

ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் (NTFC) செயற்திறன் மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி அறிவுரைகளை வழங்கினார்.  

இலங்கைக்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உகந்த சூழலை கட்டமைப்பதற்கான துரிதமானதும் மிக முக்கியமானதுமான தீர்மானங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.  

நாட்டிற்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டதோடு, தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான  செயலகத்தின் பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.  இந்த செயலகத்தினால் 2025-2030 காலப் பகுதியில் நிறைவுசெய்யப்பட வேண்டிய பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

இதன் பூர்வாங்க நடவடிக்கையாக, தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான செயலகத்தை நிதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ்  முன்னெடுப்பதற்கும் அதன் பணியாளர் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தற்போது சுங்கத் திணைக்களத்தின் கீழ் இயங்கும்  தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான செயலகத்திற்கு 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை, நிதி அமைச்சின் கீழ் கொண்டுவருதல் தொடர்பிலும், அதன் இணையத்தளத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் முன்னேற்ற அறிக்கையிடல், கட்டமைப்பு தயாரித்தல் போன்ற தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் வினைத்திறனான செயற்பாட்டை மேற்பார்வை செய்வதற்கு உயர்மட்ட அதிகார சபையொன்று அவசியம் என    தனியார் துறைப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.  ஒவ்வொரு முகவர் நிறுவனங்களினதும் பொறுப்புகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கு  முறையான அறிக்கையிடல் பொறிமுறையொன்றை  நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனம் தலைவர் கெனீசியஸ் பெர்னாண்டோ, மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக   சம்மேளனத்தின் உப தலைவி கயானி டி அல்விஸ், இலங்கை வர்த்தக சபையின் உதவிச் செயலாளர் மனோரி திஸாநாயக்க மற்றும் தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.