⏩ கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகளில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை...

⏩ அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரச மற்றும் தனியார் துறையை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களை வழங்குதல்...

⏩ கால்நடைகள், கோழி வளர்க்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடர  அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அண்மையில் சிறிது இடம் கொடுக்க பேச்சுவார்த்தை...

⏩ இந்த ஆண்டு இறுதிக்குள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள்...

⏩ அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களை தடுக்க அக்குடியிருப்புகளில் வசிக்கும் இளைஞர்களை உள்ளடக்கிய போதைப்பொருள் தடுப்பு படை...

  -  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்படும் மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற அம்சங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

அரச மற்றும் தனியார் துறையை இணைத்து வழிகாட்டுதல்களை வழங்குமாறு அமைச்சர் கூறினார். இத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இந்த பணிப்புரைகளை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோரைக் குடிவைப்பதற்காக இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அதற்கான நிதியுதவியை ஆசிய உள்கட்டமைப்பு பொது வசதிகள் அபிவிருத்தி வங்கி வழங்கும்.

கொழும்பகே மாவத்தை, ஸ்டேடியம்கம, ஆப்பிள்வத்த, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர, மாதம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் தொகுதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த வீடுகளில் ஒன்று 550 சதுர அடியில் இருக்க வேண்டும், சம்பந்தப்பட்ட வீடு மற்றும் சொத்துக்கான உரிமைப் பத்திரம், இலவச தண்ணீர்/மின்சார இணைப்பு, வருமான இழப்பு மற்றும் வாழ்வாதார இழப்புக்கான உதவித்தொகை, நிதி மற்றும் இதர உதவித்தொகைகள் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இன்று (14) நடைபெற்ற கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் பங்குதாரர்களுக்குத் தெரிவிக்கும் விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

கால்நடைகள் மற்றும் கோழிகளை வளர்க்கும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்வதற்கு குடியிருப்புகளுக்கு அண்மையில் சிறிது இடம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார். அப்படி இல்லை என்றால் மக்கள் அனாதரவாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

பயிற்சித் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் போன்றவற்றை மக்களுக்காக நடைமுறைப்படுத்துவதுடன், திட்டத்தின் தோல்வியுற்ற பகுதிகளை அடையாளம் காண வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்காக கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை இந்த ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் நியமிக்கவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

அமைச்சு அதிகாரிகள் குழுவுடன் தொடர்ந்து கலந்தாலோசித்து அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளை அவர்களிடம் பரிந்துரைத்து தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
 
தோல்வியடைந்த பகுதிகளை கண்டறிந்து, மக்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட திட்டத்தை மேலும் வெற்றியடையச் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றிப் பரவி வரும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில், அந்த குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்களைத் தொடர்பு கொண்டு போதைப் பொருள் ஒழிப்புப் படையை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு-14, அசோக பௌத்த நிலையத்தின் விகாராதிபதி வண. இங்குருவத்தே விபாவிரதன தேரர், தற்போது மக்கள் குடியிருக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தீயணைப்பான் உள்ளிட்ட மின்சாதனங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மின்தூக்கிகள் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சில குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குப்பைகளை நெடுஞ்சாலையில் வீசுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாமானியர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் மக்களாலேயே பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் அவர்  தெரிவித்தார்.

மேலும் அங்கு நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதால் குடியிருப்புகள் மாசுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை உட்பட மக்களுக்கு வீடுகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து வீடமைப்பு தொடர்பான தரவு அமைப்பை உருவாக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.பி யலேகம, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, கொழும்பு நகர மறுமலர்ச்சி திட்ட  பணிப்பாளர் டி.ஆர்.பிடிகல உள்ளிட்ட அமைச்சின் நிறுவனங்களின் அதிகாரிகள், மாளிகாவத்தை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி எச்.எம்.பி.ஜி. விஜேவர்தன, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.