மேலும் ஒரு பேருந்து விபத்து - இருவர் பலி


அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஓடைக்குள் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கதுருவெலயில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த இந்த பேருந்து கொட்டாலியா ஓயாவில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து , ஓடையில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதுடன், காயமடைந்த 41 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பூண்டுலோயா துனுகெதெனிய - மடகும்புர வீதியின் வளைவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலை பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை மற்றும் மல்தெனிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.