23 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் - 3 பிரதான நிறுவனங்கள் தள்ளாட்டம்



23 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் - 3 பிரதான நிறுவனங்கள் தள்ளாட்டம்


இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட எரிபொருளுக்கு இலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் விமான சேவையும் இருபத்து மூவாயிரத்து எண்ணூறு (23800) கோடி ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையில் (2023) இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



இவ்வாறு நிதி தேங்கியுள்ளமையின் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நடத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை நலிவடைந்துள்ளதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அரசாங்கத்திற்கு 69 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இலங்கை வங்கிக்கு 2600 மில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியிருந்ததாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.



எரிபொருள் இறக்குமதிக்கு வசதியாக பயன்படுத்தப்படும் 69 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடன் வசதியைத் தீர்ப்பதில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.



இந்நிலையில், இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் மூலோபாயத்தால் நிதிப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்