இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் புதிய புகையிரதங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் இடையே புகையிரத சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தால் அடுத்தவருடம் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

‘கடன்களை செலுத்தும் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதும் தெற்கை போன்று வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளது. மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ‘வடக்கின் வசந்தம்’, ‘கிழக்கின் உதயம்’ போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இத்திட்டங்கள் கடன் உதவியின் கீழே முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக நாம் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டுள்ள கடன்கள் இன்னமும் செலுத்தி முடிக்கப்படவில்லை.
கடன்களை செலுத்த முடியாததால் நாடு கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் புதிய புகையிரதங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்தால் அடுத்த வருடம் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.