ஊடக அடையாள அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன ; உண்மையான ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் ஊடக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை - DGI பணிப்பாளர் நாயகம்

Rihmy Hakeem
By -
0


 கடந்த கால அரசாங்கங்களின் போது பெருமளவிலானோரால் ஊடக அடையாள அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிலர் அதனைப் பயன்படுத்தித் தங்களது தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களைக்கூட மேற்கொண்டுள்ளதாகவும், இதனால் இம்முறை ஊடக அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை முறைப்படுத்தப்பட்டு, உண்மையான ஊடகவியலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாத்திரம் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஹர்ஷ பண்டார தெரிவித்துள்ளார்.


ஊடக அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் "அசி திசி பியவர" (Asi Disi Piyawara) 2026 ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் பயிலரங்கில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஹர்ஷ பண்டார இதனைத் தெரிவித்தார்.


இப்பயிலரங்கு அண்மையில் (17 ஆம் திகதி) கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், இதில் கம்பஹா மாவட்டத்தின் தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்:


"இம்முறை அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகைகளை (Scholarships) வழங்குவதற்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இது இனிமேலும் அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கோ அல்லது அரசாங்க ஊடகப் பிரிவுகளுக்கோ கிடைக்காது."


2024 ஆம் ஆண்டளவில் 8,100 ஊடக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த ஆண்டு அந்த அடையாள அட்டைகளை வழங்கும் முறைமை சீரமைக்கப்பட்டதன் மூலம் நாட்டில் 4,700 உண்மையான ஊடகவியலாளர்கள் மாத்திரமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் அமைச்சினால் வழங்கப்படும் அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இப்பயிலரங்கில், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகருமான சந்தன சூரியபண்டார ஊடகத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும், "ஊடகவியலில் செயற்கை நுண்ணறிவை (AI) சாதகமாகப் பயன்படுத்துதல்" என்ற தலைப்பில் கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ சிறப்பு உரையொன்றையும் நிகழ்த்தினர்.


அதனைத் தொடர்ந்து, செய்திகளை அறிக்கை இடும்போது பின்பற்ற வேண்டிய "ஊடக ஒழுக்கக்கோவை மற்றும் இலங்கையின் தற்போதைய ஊடகப் பயன்பாடு" என்ற தலைப்பில் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா கருத்துரைகளை வழங்கினார்.


(நிமல் ராஜபக்ஷ)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)