தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் 36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக, கம்பஹா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியின் ஆண்கள் பிரிவு போட்டியில் கஹட்டோவிட்ட யுனைடட் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் முதலிடத்தைப் பெற்று அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு சார்பாக கம்பஹா மாவட்ட மட்ட போட்டிகளுக்குத் தெரிவான கஹட்டோவிட்ட யுனைடட் இளைஞர் கழக அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. எனினும் துரதிஷ்டவசமாக நேற்று முன்தினம் (20) இறுதிப்போட்டியில் சப்புகஸ்கந்த இளைஞர் கழக அணியிடம் 0 - 1 என்ற கோல் அடிப்படையில் தோல்வியை தழுவி தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இழந்தது.
மேற்படி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கஹட்டோவிட்ட யுனைடட் இளைஞர் கழகம் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கலகெடிஹேன தர்மாஷோக இளைஞர் கழகம் ஆகிய அணிகளுக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட அத்தனகல்ல இளைஞர் கழக சம்மேளனத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

