புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் கல்விச் சுமையைக் குறைக்க திட்டம்; மாணவர்களுக்கு ரூ.10,000 வவுச்சர்

Rihmy Hakeem
By -
0

 



(ஸனா அன்ஜும்)


வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் பணிபுரியும் குறைந்த வருமானம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 10,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நலன்புரிப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும், வெளிநாட்டுப் பணியை நிறைவுசெய்து கடந்த மூன்று வருடங்களுக்குள் இலங்கைக்குத் திரும்பிய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.


இதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகளின்படி மாதாந்தம் 400 அமெரிக்க டொலர் அல்லது அதற்குக் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.


வெளிநாட்டில் தற்போது பணிபுரியும் தொழிலாளர்கள், பணியகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் நிறைவடைந்த பின்னரே விண்ணப்பிக்க முடியும். வெளிநாட்டுப் பணியை நிறைவுசெய்து இலங்கைக்குத் திரும்பியவர்கள், குறைந்தபட்சம் ஒரு வருடம் வெளிநாட்டில் பணிபுரிந்திருப்பதுடன், கடந்த மூன்று வருடங்களுக்குள் நாடு திரும்பியிருக்க வேண்டும்.


அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறத் தகுதியுடையவர்கள். இதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து கல்வி உபகரண உதவிகளைப் பெற்ற மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.


விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவம், பாடசாலை அதிபரின் பரிந்துரை, பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளரின் கடவுச்சீட்டுத் தகவல் பக்கத்தின் பிரதி உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டுப் பணியை நிறைவுசெய்து நாடு திரும்பியவர்கள், இலங்கையிலிருந்து வெளியேறியமை மற்றும் மீண்டும் நாடு திரும்பியமைக்கான குடிவரவு, குடியகல்வுப் பதிவுகளைக் கொண்ட கடவுச்சீட்டுப் பக்கங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்காக இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளதுடன், உரிய கால எல்லைக்குள் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வவுச்சர்கள் வழங்கப்படும். காலதாமதமாக அல்லது முழுமையற்ற வகையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


மேலதிக தகவல்களுக்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ள முடியும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)