சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, விரைவான தீர்வை வழங்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


சுகாதார உதவியாளர்களுக்கான சீருடை விதிமுறைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய தெளிவான தேசியக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் எனத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாகச் சுகாதார அமைச்சர் அவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:


தொழில்சார் தரநிலைகளும் கலாசார விருப்பங்களும்


மருத்துவச் சுகாதாரம், நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் தரநிலைகளைப் பேணும் அதேவேளையில், ஊழியர்களின் நியாயமான கலாசார, மத மற்றும் ஆடை ஒழுக்கம் சார்ந்த விருப்பங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் சீருடைக் கொள்கை அமைய வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழு இது குறித்து ஏற்கனவே பரிந்துரைகளை வழங்கியுள்ளதால், உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்து திருத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.


ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு


இப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வை எட்டுவதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை வழங்கத் தயார் எனத் தெரிவித்துள்ள அவர், நிர்வாக மற்றும் கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடமே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கேள்விகள்:


குழு நியமனம்: சீருடை விதிமுறைகள் குறித்து ஆராய்வதாக உறுதியளிக்கப்பட்ட குழு முறையாகவும் உத்தியோகபூர்வமாகவும் அமைக்கப்பட்டுள்ளதா?


பணிகளின் முன்னேற்றம்: அக்குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளதா? இதுவரை எத்தகைய முன்னேற்றங்கள் அல்லது பரிந்துரைகள் எட்டப்பட்டுள்ளன?


காலக்கெடு: அக்குழுவின் பணிகள் எப்போது நிறைவடையும்? திருத்தியமைக்கப்பட்ட புதிய தேசியச் சுற்றறிக்கை எப்போது வெளியிடப்படும்?


இவ்விடயத்தில் ஏற்படும் தாமதம் தேவையற்ற சமூக பதற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், சுகாதார அமைச்சு இதன் அவசரத் தன்மையைப் புரிந்து கொண்டு தெளிவான கால அட்டவணையுடன் விரைந்து பதிலளிக்க வேண்டும் என எம்.பி சாணக்கியன் இராசமாணிக்கம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)