கஹட்டோவிட்ட எம்.எச்.எம்.அஷ்ரப் ஹாஜியார் மாவத்தை கால்வாய் புனரமைப்புப் பணிகள் நிறைவு! (விபரம்)

Rihmy Hakeem
By -
0


 நீண்ட காலமாக மோசமான நிலையில் காணப்பட்ட கஹட்டோவிட்ட எம்.எச்.எம்.அஷ்ரப் ஹாஜியார் மாவத்தையிலுள்ள கால்வாயின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் இன்சாபின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச சபையின் ரூபா 14.5 இலட்சம் நிதியொதுக்கீட்டில் மேற்படி இப்புனரமைப்புப் பணி இடம்பெற்றுள்ளது.

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தை ஊடறுத்துச் செல்லும் குறித்த கால்வாய் நீண்டகாலமாக சிதைவடைந்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குப் பலமுறை கொண்டு சென்றிருந்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை தொடர்ந்தும் முகங்கொடுத்து வந்தனர்.

முக்கியமாக கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் மற்றும் முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் மழைகாலங்களில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர்.


இது தொடர்பாக கடந்த வருடம் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் மற்றும் கஹட்டோவிட்ட வட்டார சபைத் தலைவர் ஜவாத் ஆகியோர் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ருவன் மாபளகம எம்பி ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்த நிலையில் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் விரைவாகப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ப்ரீமிக்ஸ் இட்டு செப்பனிடும் பணிகள் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளதாக கஹட்டோவிட்ட வட்டார சபைத் தலைவர் ஜவாத் தெரிவித்தார்.  


இதேவேளை, அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் பிர்தௌஸ் அவர்களும் நீண்ட காலமாக இக்கால்வாய் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பது தொடர்பாக பல்வேறு தடவைகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் தற்காலிக தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த இக்கால்வாய் புனரமைப்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ளமை அப்பகுதி மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளதுடன், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்த மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)