அரசாங்க தகவல் திணைக்களத்தில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்களிடத்தில் நட்புணர்வினை மேம்படுத்தும் நோக்கில் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற மென்பந்து கிரிக்கெட் போட்டி இவ்வருடமும் கடந்த (17) சனிக்கிழமை பொல்ஹேன்கொட மகாமாத்ய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
டிஜிஐ பிறிமியர் லீக் (DPL – 2026) சாம்பியன் பட்டத்திற்காக 05 அணிகள் போட்டியிட்டதுடன், துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்துத் துறைகளிலும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் திறமைகளை வெளிப்படுத்தின. இதன் இறுதிப் பெறுபேறாக, முதித அபேநாயக்க அவர்களின் தலைமையில் விளையாடிய DGI Warriors அணி சாம்பியன் பட்டத்தையும், எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்களின் தலைமையில் விளையாடிய DGI Strikers அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
தொடராட்ட நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் நாயகனாக முதித அபேநாயக்க அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரராக சிரான் விமுக்தி அவர்களும், சிறந்த பந்துவீச்சாளராக எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்களும், சிறந்த வீராங்கனையாக உதயங்கனி தேவகே அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
எளிமையான அதேவேளை பெருமிதத்துடன் வெற்றிகரமாக நிறைவடைந்த ʺDPL-2026ʺ கிரிக்கெட் தொடருக்கு தேசிய லொத்தர் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அனுசரணை வழங்கியிருந்தன.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொடரில், 'அசிதிசி' கிரிக்கெட் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஊடக அமைச்சின் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் தண்டுல ஜயதுங்க அவர்கள் உள்ளிட்ட அனுசரணை வழங்கிய நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
எஸ்.ஏ.எம். பவாஸ்
செயலாளர் - அரசாங்க தகவல் திணைக்கள விளையாட்டுச் சங்கம்








