பண்டித வேகொவ்வ பஞ்ஞாவம்ச நாயக்க தேரரின் பெயரால் பெயரிடப்பட்ட எலுவாபிட்டிய ஸ்ரீ போதிருக்காராம விகாரை வீதி மக்கள் பாவனைக்குக் கையளிப்பு.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியின், எலுவாபிட்டிய வட்டாரம், 333 எலுவாபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ போதிருக்காராம விகாரை வீதி காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர், பண்டித வேகொவ்வ பஞ்ஞாவம்ச நாயக்க தேரரின் பெயரால் பெயரிடப்பட்டு 2026 நவம்பர் 24 ஆம் திகதி மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் தலைமையிலும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அத்தனகல்ல அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ருவன் மாபலகம அவர்களின் பங்குபற்றுதலுடனும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
எலுவாபிட்டிய கிராமத்தின் ஆன்மீக, கலாசார, கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்ட சகாப்த புருஷரான பண்டித வேகொவ்வ பஞ்ஞாவம்ச நாயக்க தேரரின் நற்பண்புகளுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, எலுவாபிட்டிய ஸ்ரீ போதிருக்காராம புராதன விகாரைக்குச் செல்லும் இந்த வீதி அன்னாரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்காக, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ருவன் மாபலகமவின் ஒருங்கிணைப்பில், 2026 கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நான்கு மில்லியன் ரூபா (ரூ. 4,000,000) நிதி ஒதுக்கீட்டில் இந்த வீதிக்கான காபட் இடும் பணிகளும் அபிவிருத்திப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கௌரவமிக்க நிகழ்வில் விகாரையின் மகா சங்கத்தினர், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பிரதேச சபையின் தவிசாளர் தர்ஷன விஜேசிங்க, பிரதேச சபை உறுப்பினர் திலகரத்ன பண்டா மற்றும் எலுவாபிட்டிய வட்டார உறுப்பினர் திலின கருணாரத்ன உள்ளிட்ட பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.







