“தேசிய பிரச்சினைகளின் போது கட்சி அரசியல் பின்னுக்கு தள்ளப்பட வேண்டும்…” - பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா

Rihmy Hakeem
By -
0


 “தேசிய பிரச்சினைகளின் போது கட்சி அரசியல் பின்னுக்கு தள்ளப்பட வேண்டும்…”


முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (பா.உ.)


(ஐ. ஏ. காதிர் கான்)


சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை இளைஞர் அனோஜனைக் காப்பாற்றுவதற்கான கூட்டு சட்ட மற்றும் இராஜ தந்திர முயற்சி பரவலான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதிலும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி இந்த தலையீட்டில் முக்கிய பங்கு வகித்தார்.


தேசிய நலன்களை, கட்சி அரசியலுக்கு மேலாக வைப்பதன் முக்கியத்துவம், ஆக்கபூர்வமான அரசாங்க நடவடிக்கையை அங்கீகரித்தல் மற்றும் அவர்களின் அரசியல், இன அல்லது மத சார்புகளைப் பொருட்படுத்தாமல் வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்து பைஸர் முஸ்தபா சிந்திக்கிறார். 


மேலும் இந்தக் கூட்டு முயற்சி, எவ்வாறு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு நேர்மறையான உதாரணத்தை வழங்கியது மற்றும் இலங்கையில் அதிக அரசியல் புரிதல் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கிறார்.


*கேள்வி: சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை இளைஞர் அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளில் எதிர்க்கட்சி சட்டத்தரணியாக நீங்கள் என்ன பங்கு வகித்தீர்கள்?*


*பதில்:* முதலாவதாக, இது எனது தலையீடு மட்டும் அல்ல என்பதை நான் வலியுறுத்த வேண்டும். இது முழு நாட்டையும் அரசாங்கத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாகும். அனோஜனின் வழக்கில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோது, அது இலங்கை முழுவதும் பரவலான கவலையைத் தூண்டியது.


இதற்கு முன்பு நான் இதேபோன்ற வழக்கில் ஈடுபட்டிருந்தேன். மாலைதீவில், ஒரு இலங்கைக் குழந்தை மற்றொரு குழந்தையைக் கொல்ல முயன்றதாக பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் குழந்தையின் பெற்றோர் என்னை அணுகிய பின்னர், நான் அந்த விஷயத்தை மாலைதீவு ஜனாதிபதியிடம் எடுத்துச் சென்று குழந்தையை விடுவிப்பதற்காக பணியாற்றினேன்.


அனோஜனின் பெற்றோரும் உதவிக்காக எங்களை அணுகினார்கள். நான் தனிப்பட்ட முறையில் அரசாங்கத்திற்கு எங்கள் சட்ட உதவியை வழங்கினேன்.  "நாங்கள் தலையிடத் தயாராக இருக்கிறோம்" என்பதைத் தெளிவுபடுத்தினேன். எங்கள் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்த அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் காட்டிய தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் நான் அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதல் மற்றும் ஆதரவுடன், ஆசாத் நவவி, உபுல் குமாரப்பெரும மற்றும் நான் உள்ளடங்கிய மூன்று பேர் கொண்ட தூதுக்குழு சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்தது.


வழக்கு சட்ட ரீதியாக சிக்கலானது. அனோஜனுக்கு ஆரம்பத்தில் உயர் நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் சைபர் குற்றம் தொடர்பாக முப்பது இலட்சம் ரியால் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகப்படியான கடுமையான தண்டனை என்று கருதப்பட்டதை எதிர்த்து, அரசாங்கமும் அவரது பெற்றோரும் மேல் முறையீடு செய்தனர்.


சவூதி அரேபிய சட்டத்தின் கீழ், குற்றங்கள் இரண்டு பரந்த வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: 'ஹத்' (Hadd) மற்றும் 'தாசீர்' (Ta’zir). 'ஹத்' குற்றங்கள் தெய்வீக சட்டத்தை மீறுவதாகக் கருதப்படுகின்றன. நபிகளாரை இழிவுபடுத்துவது போன்ற குற்றங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை, இதற்கு மன்னரால் கூட மன்னிப்பு வழங்க முடியாது. இதன் பொருள் 'அரசியல் தலையீடு' அல்லது உயர் மட்டத்தில் ஒரு தூதுக்குழு தன்னால் மட்டும் சட்ட வரம்புகளை மீற முடியாது.


இந்தச் சிக்கல்களை உணர்ந்து, அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர், எங்களுக்கு முழு ஆதரவை வழங்கினர். அனோஜனுக்கு நிவாரணம் பெறுவதற்கு கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும் நாங்கள் பின்பற்றுவதற்காக நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் வழக்கறிஞர் செலவுகள் உட்பட சட்ட செலவுகளை ஏற்கவும் அரசாங்கம் உறுதியளித்தது. அந்த நிதி மற்றும் இராஜ தந்திர அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. நாங்கள் சவூதி அரேபியாவில் ஒரு சட்டக் குழுவை ஈடுபடுத்தி, கணிசமான செலவுகளைச் செய்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தோம். உச்ச நீதிமன்றம் பின்னர், மரண தண்டனையை இரத்துச் செய்து வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. 


நான் எதிர்க்கட்சி வழக்கறிஞராக செயல்பட்டாலும், அரசாங்கத்தின் முழு சட்ட, நிதி மற்றும் இராஜதந்திர ஆதரவு இல்லாமல் இந்த விளைவு சாத்தியமாகியிருக்காது. ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் வெளிநாட்டில் பணயத்தில் இருக்கும்போது, 'அரசியல் வேறுபாடுகள் நீதியைப் பெறுவதற்கான கூட்டு முயற்சிக்கு பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும்' என்பதை இந்த வழக்கு நிரூபித்தது.


*கேள்வி: ஒரு முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதியாக, தேசிய பணியில் அரசாங்கத்துடன் கைகோர்க்க நீங்கள் எடுத்த முடிவு, அரசியல் ஒத்துழைப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் குறித்து என்ன செய்தியை அனுப்புகிறது?*


*பதில்:* 'எங்கள் ஈடுபாடு நாட்டிற்கு ஒரு சக்தி வாய்ந்த செய்தியை அனுப்பியது' என்று நான் நம்புகிறேன். நான் ஒரு முஸ்லிம். உபுல் குமாரப்பெரும ஒரு சிங்களவர்.  அனோஜன் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன். நாங்கள் இனம், மதம் அல்லது கட்சி அரசியல் அடிப்படையில் சிந்தித்து சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்யவில்லை. 'நாங்கள் அனைவரும் இலங்கையர்கள்' என்ற ஒரே பகிரப்பட்ட நம்பிக்கையுடன் சென்றோம்.


இந்த செயல்முறை முழுவதும் அரசாங்கம் வெளிப்படுத்திய அரசியல் முதிர்ச்சியை நான் மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்க வேண்டும். ஜனாதிபதியோ அல்லது வெளிவிவகார அமைச்சரோ கட்சி பரிசீலனைகள் தடையாக இருக்க அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி வழக்கறிஞர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து, அரசின் முழு ஆதரவையும் வழங்குவதன் மூலம், தேசிய நலனை முதலில் வைக்க விருப்பம் காட்டியது.


இலங்கையில், இன மற்றும் அரசியல் பிளவுகள் பெரும்பாலும் அரசியல் ஆதாயத்திற்காக சுரண்டப்பட்டுள்ளன. இந்த வழக்கு வேறு ஒரு உதாரணத்தை வழங்கியது. ஒரு இளம் இலங்கையரின் உயிரைக் காக்க அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு இன சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்தனர்.


நாட்டின் எதிர்காலத்திற்கு, குறிப்பாக சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பதிலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் இந்தக் கூட்டு சட்ட மற்றும் இராஜ தந்திர முயற்சியை ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாக நான் காண்கிறேன். கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஒத்துழைப்பைத் தடுக்க அரசியல் வேறுபாடுகள் தேவையில்லை.


நாங்கள் அரசியலில் கருத்து வேறுபாடு கொள்ளலாம், ஆனால், ஒரு குடிமகனின் உயிர், பணயத்தில் இருக்கும்போது, நாட்டின் கண்ணியம் சம்பந்தப்பட்டிருக்கும்போது, அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒரு பொதுவான இலக்கை நோக்கி செயல்பட முடியும். நான் எதிர்க்கட்சியில் இருந்தாலும், இந்த வழக்கில் அரசாங்கம் வெளிப்படுத்திய தலைமைத்துவத்தையும் மனிதாபிமான அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.


*கேள்வி: குற்றம் மற்றும் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக அனோஜனுக்கு நிவாரணம் பெறுவதில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சட்ட ஆதரவு எவ்வாறு பங்களித்தது?*


*பதில்:* நபிகளார் மற்றும் எந்தவொரு மதத் தலைவரையும் அல்லது எந்தவொரு மதத்தையும் அவமதிப்பது பல நாடுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் குற்றம் என்பதை நாம் தெளிவாக இருக்க வேண்டும். இதுவே இலங்கையிலும் பொருந்தும், அதே நேரத்தில் சவூதி அரேபியா இத்தகைய குற்றங்களை, குறிப்பாக கடுமையாகக் கருதுகிறது. 'அனோஜன் ஒரு குற்றத்தைச் செய்தார்' என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.


எவ்வாறாயினும், எங்கள் நோக்கம், அவருக்கு 'மரணம்' என்ற தீவிர தண்டனையிலிருந்து விலக்கு அளித்து, குறைக்கப்பட்ட தண்டனை அல்லது நாடு கடத்தல் மூலம் மிகவும் கருணையான விளைவைப் பெற நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைப்பதாகும்.


அரசாங்கத்தின் நேரடிச் சட்ட தலையீடு முக்கியமானதாக இருந்தது. ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவில் ஒரு முன்னணிச் சட்டக் குழுவை ஈடுபடுத்தி, அதில் உள்ள கணிசமான செலவுகளை ஏற்றுக்கொண்டது.


நாங்கள் வழக்கறிஞர்களுடன் நெருங்கிய ஆலோசனையில் இருந்து சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் எங்கள் வாதங்களை முன்வைத்தோம். அந்த முயற்சிகளின் விளைவாக, மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டு, வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.


அரசாங்கத்தின் சட்ட மற்றும் நிதி ஆதரவு இல்லாமல், சவூதி அரேபிய நீதித்துறை அமைப்பிற்குள் இந்த நிவாரணத்தைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்திருக்கும். எனவே, இந்த செயல்முறை முழுவதும் அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு முழு அங்கீகாரத்தையும் பெறத் தகுதியானது.


*கேள்வி: சிறுபான்மை இளைஞர் சார்பாக அரசாங்கம் தலையிட்டது, சிறுபான்மை வாக்குகளை வெல்வதை நோக்கமாகக் கொண்ட அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று, சமூக ஊடகங்களும் சில அரசியல் தளங்களும் கூறியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவராக இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?*


*பதில்:* இத்தகைய குறுகிய மனப்பான்மை கொண்ட விளக்கங்களை நான் கடுமையாக நிராகரிக்கிறேன். இந்தத் தலையீட்டிற்குப் பின்னால் எந்த அரசியல் கணக்கீடும் அல்லது உள் நோக்கமும் இல்லை. அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர், மனிதாபிமான அக்கறை மற்றும் இராஜ தந்திர பொறுப்புணர்வு காரணமாக செயல்பட்டனர்.


ஒரு இலங்கைப் பிரஜை மற்றொரு நாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது, அந்த நபரின் உயிரைப் பாதுகாப்பது எந்தவொரு அரசாங்கத்தினதும் அடிப்படைப் பொறுப்பாகும். இந்த வழக்கில், அரசாங்கம் அந்த தேசிய மற்றும் மனிதாபிமான கடமையை நிறைவேற்றியது. எதிர்க்கட்சி அரசியல்வாதியாக, அது செய்ததற்கு எனது பாராட்டைத் தெரிவிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.


மாற்று வழியைக் கவனியுங்கள். ஒரு இலங்கையர் வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது, அரசாங்கம் முதலில் அந்த நபரின் இனம் அல்லது அவர் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறார் என்று கேட்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. கட்சி அரசியல் தலையிட அனுமதிக்காமல், ஒரு இலங்கைப் பிரஜைக்காக நிற்பதன் மூலம் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினர்.


சமூக ஊடகங்களில் என்ன சொல்லப்பட்டாலும், அரசாங்கத்தின் தலையீடு மரண தண்டனையை இரத்துச் செய்ய உதவியது, அனோஜனுக்கு தனது வழக்கை மீண்டும் வாதாட மற்றொரு வாய்ப்பை வழங்கியது. அதுதான் முக்கியம். இந்த உணர்வில் தான், நாங்களும் எங்கள் ஒத்துழைப்பை வழங்கினோம்.


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், எதிர்க்கட்சியின் பொறுப்பு அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசியல் போட்டியாக மாற்றுவது அல்ல. நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யும் போது, ஆக்கபூர்வமான முயற்சிகளை அங்கீகரிப்பதும் அவற்றை ஆதரிப்பதும் ஆகும்.


*கேள்வி: வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் எதிர்கால சவால்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களைக் கையாளும் போது, அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இந்த அனுபவத்திலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?*


*பதில்:* மிக முக்கியமான பாடம் என்னவென்றால், தேசிய நலன்கள் பணயத்தில் இருக்கும்போது, கட்சி அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும். நமது எல்லைகளுக்கு அப்பால், நாம் அனைவரும் ஒரே நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்: இலங்கை.


அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சகம் எடுத்த அணுகுமுறை ஒரு மதிப்புமிக்க முன்னுதாரணத்தை அமைத்துள்ளது. 'வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், கஷ்டத்தையோ அல்லது அநீதியையோ எதிர்கொண்டால், அவர்களின் நாடு அவர்களுக்கு துணை நிற்கும்' என்ற நம்பிக்கையை இது வலுப்படுத்தியுள்ளது.


எதிர்க்கட்சி அரசியல்வாதியாக, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான தேசிய முயற்சிகளை ஆதரிக்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். நமது அரசியல் கலாசாரம் மாற வேண்டும். அரசாங்கம் செய்யும் அனைத்தையும் எதிர்க்கட்சி விமர்சிக்கக் கூடாது. அதேபோல், எதிர்க்கட்சி முன்வைக்கும் ஒவ்வொரு முன்மொழிவையும் அரசாங்கம் நிராகரிக்கக் கூடாது.


இந்த வழக்கில், அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையையும் கட்சி எல்லைகளைத் தாண்டி செயல்பட விருப்பத்தையும் வெளிப்படுத்தியது. தேவையான இராஜ தந்திர மற்றும் நிதி உதவிகளை வழங்கும் அதே வேளையில், எதிர்க்கட்சி வழக்கறிஞர்களின் ஆதரவைப் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராகவும் மூத்த வழக்கறிஞராகவும், இந்த செயல்முறை முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட தலைமைத்துவத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.


நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு முயற்சி எப்போது வந்தாலும், நானும் எனது சகாக்களும் எங்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். கட்சி விசுவாசங்களை விட தேசிய பொறுப்புகள் முன்னுரிமை பெற வேண்டும்.


தமிழில் : ஐ. ஏ. காதிர் கான்

நன்றி : டெய்லி நியூஸ் (2026.10.30)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)