தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வேதனையோடு விலகியுள்ளேன். கட்சிக்கும், அதன் தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த நான் கொள்கை ரீதியான முரண்பாடுகளினால் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்.எனது வெளியேற்றத்தினை எவரும் பிரதேசவாத உணர்வோடு நோக்கக் கூடாது.  

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகளுடனான விஷேட சந்திப்பு நேற்றுமுன்தினம் (11) அட்டாளைச்சேனை றஃமானியாபாத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், 

நமது மூத்த அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நலனுக்காகவே ஒற்றுமையாக கிழக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் கிராமங்களில் பிரதேச வாத உணர்வுகளை ஊட்டி முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் பிரதேசங்களையும் பிரித்து வைத்தனர். இதனால் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் பகை உணர்வுகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.  ஜனநாயக ரீதியில் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டு நாம் தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறி உள்ளோம். இதற்காக என்னை விமர்சனம் செய்யும் ஒரு கூட்டம் விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள். அவைகளை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையில்லை. என்னையும் கட்சியின் மூத்த பிரமுகர்களையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த குழு உச்சமான விமர்சனங்களை செய்து அதன் நோக்கத்தினை நிறைவேற்றியுள்ளன.  

நாம் நீண்ட காலமாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்பதற்காக கட்சிக்குள் நடந்த எல்லா விடயங்களையும் பகிரங்கமாக கூறும் அரசியல் கலாசாரத்திற்கு நாம் எப்போதும் எதிரானவர்கள் என்பதனை மறந்து விடக் கூடாது. என்னை விமர்சனம் செய்யும் போது நான் மௌனமாக இருந்து கொள்கின்றேன். ஏனெனில் என் மீது வீண் பழி சுமத்துபவர்களுக்கு நான் ஒரு போதும் பதில் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் அவர்கள் இறைவனை அஞ்சி நடக்க வேண்டியுள்ளது. 

நான் கட்சியை விட்டு வெளியேறியமை குறித்து உள்ளத்தால் வேதனை பட்ட பிரதேசம் அக்கரைப்பற்று என்பது எனக்கு நன்கு தெரியும். அந்த மக்கள் எனக்காக எப்போதும் ஆதரவு வழங்கியவர்கள். ஆனால் கட்சியை விட்டு வெளியேறிய போது நமது அட்டாளைச்சேனைப் பிரதேசம் மகிழ்ச்சி அடைந்தன. அதற்கான காரணங்களை நான் நன்கு அறிந்தவன்.  

நமக்கு எவ்வாறு அரசியல் அதிகாரம் கிடைத்ததோ அதேபோல் அட்டாளைச்சேனை பிரதேசம் தேசிய காங்கிரஸூக்கும், அதன் தலைமைக்கும் அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு பாரிய பங்கினை வழங்கி உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.