( மினுவாங்கொடை நிருபர் )
இனவாதத்தைத் தூண்டும் எத்தகைய சக்திகளையும் ஆதரிக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டுமானால், இனங்களுக்கிடையில் சமாதானம், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் கட்டியெ ழுப்பப்படல் வேண்டும் என, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பிலே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இனவாதத் தாக்குதல்களால் சேதமுற்ற மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலைப் புனரமைக்க, நிதியுதவி வழங்கிய அமைச்சர், அங்கு இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பௌஸி, பாராளுமன்ற உறுப்பினர்களான எட்வர்ட் குணசேகர, ஹர்ஷன ராஜகருண, முஜீபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் உரையாற்றும்போது, மினுவாங்கொடை பிரதேச முஸ்லிம்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எந்த மதங்களைச் சார்ந்தோரானாலும், இலங்கையின் மக்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இனம், மதம், மொழி வேறுபாடுகளைப் புறந்தள்ளிச் செயற்பட்டால், எத்தகைய சவால்களையும் வெற்றி கொள்ள முடியும்.
புத்த பெருமான் மனித குலத்தை நேசித்தவர். எந்த இனத்தவரையும் இனவாதக் கண்கொண்டு பார்க்க முடியாது. பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதை பௌத்தம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )