ஆக்கம் – ஆதிப் அஹமட்

ஏப்ரல் மாதம் என்பது குறிப்பாக பெரும்பாலும் இலங்கையை பொருத்தவரையிலும் மகிழ்ச்சி நிறைந்த காலம். தமிழ் சிங்கள மக்கள் தங்களின் வருடப்பிறப்பினை மிக விமர்சையாககொண்டாடுகின்ற காலம் என்பதோடு கிறிஸ்தவ மக்கள் 40 நாட்கள் தவக்கால வழிபாடுகளை மேற்கொண்டு பின்னர் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆகிய இருபெரும் முக்கியமான நாட்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபடுகின்ற நாட்களையும் உள்ளடக்கிய காலம்.

இந்த காலப்பகுதி  விடுமுறைகள் அதிகமாக நிறைந்த காலம் என்பதால் அநேக மக்கள் வெளியிடங்களை நோக்கி சுற்றுலாக்களும் அதிகம் செல்லுகின்ற ஒரு காலப்பகுதி. அவ்வாறான ஒரு மகிழ்ச்சியான நாட்களைக்கொண்ட அந்த மாதத்தில்தான் ஏப்ரல் 21 என்ற அந்த ஞாயிற்றுக்கிழமையயும் விடிகிறது. விடுமுறை தினம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக மக்கள்  தங்களின் பணிகளுக்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றார்கள். கிறிஸ்தவ மக்களை பொறுத்த வரையில் அவர்களின் மத நம்பிக்கை அடிப்படையில் அன்றைய நாளானது இயேசுநாதர்  சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்து எழுந்ததை நினைவுகூறுகின்ற மகிழ்ச்சியான உயிர்த்த ஞாயிறு. நள்ளிரவு ஆராதனைகளை முடித்துக்கொண்டவர்கள் வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் கொண்டாட்டங்களை கொண்டாடிக்கொண்டிருக்க இன்னும் பலர் காலை ஆராதனைகளுக்காக தேவாலயங்களை நோக்கி விரைந்திருந்தார்கள்.

காலை 9 மணியை அண்மித்திருக்கும் பெரும் அதிர்ச்சியும் பயமும் நிறைந்த செய்தி நாம் காதுகளை எட்டுகிறது. ஆரம்பத்தில் ஒரு தேவாலயத்தில் ஏதோ ஒரு வெடிப்பு சம்பவமாம் என்று எட்டிய செய்தி பின்னர் மூன்று தேவாலயங்களிலும் சுற்றுலா விடுதிகளிலும் குண்டுத்தாக்குதல் என உறுதி செய்யப்படுகின்றது. இலங்கை மக்கள் மத்தியிலே பெரும் அச்சமும் பதற்றமும்ஆற்கொண்டது. இலங்கையர்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஏகப்பட்ட விடை தேட முடியாத வினாக்களோடு பொழுதுகள் மெல்ல மெல்ல நகரத்தொடங்கியது.

இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்துக்கு இன்னுமோர் அதிர்ச்சி செய்தி விரைகிறது. அதுதான் முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு தீவிரவாதிதான் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கிறான் என்ற சோக செய்தி. உண்மையாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த யாருமே கனவில் கூட நினைத்திருக்க முடியாத அதிர்ச்சி நிறைந்த செய்தியாகத்தான் அது அமைந்திருந்தது. அப்பாவி சமூகத்தின் மீது முஸ்லிம் பெயர் தாங்கிய குறித்த தீவிரவாதக்கும்பல் குண்டுத்தாக்குதல் நடாத்தியது ஏன் என்பது இன்றளவும் முஸ்லிம் சமூகத்துக்கு புரியாத புதிர்தான். ஏனெனில் தீவிரவாத வன்மத்தை தூண்டிவிடுகின்ற எந்தளவு நெருக்குதல்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு இருந்திருக்கவில்லை. குறிப்பாக உண்மையை சொல்லப்போனால் இந்த நாட்டில் கௌரவமாக தலைநிமிர்ந்து வாழ்ந்த முஸ்லிம் சமூகம் முஸ்லிம் பெயர் தாங்கியவனின் கொடூர செயலால் தலைகுனிந்து நின்றது. மாற்று மதத்தவர்களோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தவர்கள் அந்த சகோதரர்கள் தங்களையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்த்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு ஒவ்வொருவர் மத்தியிலும் மேலோங்கியிருந்தது.

கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா? என்பதைப்போல ஏற்கனவே நாட்டில் முஸ்லிம் விரோத போக்கினையே தங்களின் குறிக்கோளாக வைத்திருந்த ஒவ்வொரு அமைப்புக்களும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி கர்ஜிக்க ஆரம்பித்தது. ஒட்டுமொத்த சமூகத்தையும் தீவிரவாத சமூகமாக சித்தரித்துவிடவேண்டும் என பல்வேறு முயற்சிகள் ஒரு சிலர் மூலமாக  நடைபெற்றன. ஆனாலும் அந்த முயற்சிகளில் தோற்றுப்போனார்கள் என்பதுதான் உண்மை. ஏனெனில் முஸ்லிம் சமூகம் அந்த தீவிரவாதக்கும்பலினை துடைத்தெறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென அவ்வளவு விரைவாக செயற்பட்டு அதில் வெற்றியும் கண்டார்கள். அதிலும் குறிப்பாக குறித்த தீவிரவாதியின் குடும்பத்தவர்கள் தொடர்பில் நொடிப்பொழுதில் செயற்பட்டு பாதுகாப்பு படையினருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதன் மூலம் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இந்த சம்பவங்களே முஸ்லிம் சமூகத்துக்கும் இந்த தீவிரவாத செயற்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிறுவியதோடு முஸ்லிம் சமூகத்தினை தீவிரவாத வாத சமூகமாக காட்ட எடுத்த முயற்சிகளும் தோல்விகண்டது.

அதிலும் குறிப்பாக  முஸ்லிம் சமூகம் சார்பில் இன்றளவும் நன்றி கூறப்பட வேண்டிய நபர் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள். தான் சார்ந்த சமூகம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் சமூகத்துக்கும் இந்த தீவிரவாத சம்பவத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறினார். அத்தோடு பாதிப்படைந்த சமூகம் இன்னுமோர் சமூகத்தின் மீது தங்களின் ஆத்திரத்தை காட்டிவிடக்கூடாது என்பதில் மிகக்கரிசனையாக செயற்பட்டார்.

இவ்வாறான சொல்ல முடியாத பல சோகங்களை சுமந்து வந்த அந்த கொடூரத்தாக்குதல் நடந்தேறி இன்றோடு ஆண்டு ஒன்று பூர்த்தியாகின்றது. உண்மையிலே முஸ்லிம் சமூகம் மிகவும் அச்ச சூழ்நிலையோடே வெளிவரவேண்டிய ஒரு பயங்கர சூழ்நிலையினை அந்த ஏப்ரல் 21 தாக்குதல் தோற்றுவித்திருந்தது. மீண்டும் அந்த பொழுதுகளை நினைத்துப்பார்க்கையில் மெய் சிலிர்க்கின்றது. தாக்குதல்களால் தங்களின் உறவுகளை பிரிந்து வாடும் உறவுகளுக்காக பிரார்த்திப்போம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.