ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது அரசாங்கத்தின் பலிவாங்கும் செயல் ; இனவாத வாக்குகளை தக்கவைக்கும் தந்திரம்


ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது அரசாங்கத்தின் பலிவாங்கும் செயல்

இனவாத வாக்குகளை தக்கவைக்கும் தந்திரம் என்றும் சாடுகிறார் முஜிபுர் ரஹ்மான்

எப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அரசாங்கம் பலிவாங்களின் அடிப்படையிலேயே கைது செய்திருக்கிறது என கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இனவாத வாக்குகளை தக்கவைத்துக்கொள்வதற்கும் இனவாத சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்குமே இந்த அரசாங்கம் இவ்வாறான அனாவசியக் கைதுகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்தமையை கண்டித்து  வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே முஜிபுர் ரஹ்மான் இந்த குற்றச்சட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், தேசப்பற்றுள்ள ஒரு இளம் சட்டத்தரணியாவார். மனிதாபிமான பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பிலும் சிறுபான்மையின மக்களுக்கெதிரான செயற்பாடுகளின்போதும் மிகவும் துடிப்புடன் செயற்பட்டு நீதிக்காக போராடினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மீறி இடம்பெற்ற ஜனநாயக விரோத ஆட்சி மாற்றத்தின்போது உயர் நீதிமன்றில் நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்வதில் முன்னின்று செயற்பட்டார்.

அத்துடன், கடந்த காலங்களில் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் திட்டமிட்ட வன்முறைகளை எதிர்த்து துணிந்து போராடிய சட்டத்தரணியாக ஹிஜாஸ் திகழ்கிறார். இந்நிலையில் அவர்மீது அரசியல் ரீதியில் பலிவாங்கும் என்னத்திலேயே அவரை கைது செய்திருக்கின்றார். இது இந்த அரசாங்கத்தின் மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

இந்த மேசமான அரசியல் கலாசாரத்திலிருந்து மஹிந்த - கோட்டா அரசாங்கம் விடுபட வேண்டும். தேர்தலை இலக்காகக்கொண்டு இனவாதத்தை கட்டவிழ்த்துவிடாது, நாட்டை மிக மோசமாக பாதிப்புறச் செய்திருக்கும் கொரோணாவுக்கு எதிரான போராட்டத்தில் உளத்தூய்மையுடன்  செயற்பட வேண்டும் என வலியுறுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

கருத்துகள்