அழகான மற்றும் பயனுள்ள எண்ணங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் எதிர்மறையான எண்ணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதாகவும் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நோய்களை எதிர்த்து நிற்பில் மனபலம் மிகமுக்கிய காரணியாக இருக்கிறது.
பயம், கவலை, ஏமாற்றம். அச்சுறுத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகளை சகித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் மனநோய் எதிர்ப்பு சக்தி என கருதலாம்.
மனதை அச்சுறுத்தும் எண்ணங்களையும் வெளிப்புற சவால்களையும் எதிர்கொள்வது மட்டுமல்லாமல் அவற்றால் ஏற்படும் பாதிப்பு உணர்ச்சிகளை சகித்துக் கொள்ளக்கூடிய சக்தி எமது மனதில் இருக்கவேண்டும். மனநேய் எதிர்ப்பு சக்தியால் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருப்பதைத் தவிர்க்கவோ, மறுக்கவோ முடியும் என்பது பொருளல்ல. ஆனால் எதிர்மறை எண்ணங்கள் சொல்லும் விதத்தில் செயற்படாமல் அவற்றை மிகவும் கவனமாக கண்கானிக்க முடியும் என்பதே பொருளாகும். மனம் சொல்வதை உடனடியாகச் செய்வதைவிட மனம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்வது இங்கு முக்கியமாகும்.
எமக்கு மனநோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எமக்குள் உருவாகும் எண்ணங்களையும் உணர்வுகளையும் கண்காணிக்கும் பார்வையாளராக எமக்கே இருக்க முடியும்.
- எமக்கு தேவைப்படுவது என்ன
- தேவைப்படாதது என்ன
- எதை முக்கியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்பதையெல்லாம் இழகுவாக அடையாளம் காணமுடியும்.
- எம்மைப் பயமுறுத்தும் எண்ணங்களைப் பொறுத்துக்கொள்ளும் திறனும் முறையாகக் கையாளும் திறனும் அதிகரிக்கும்.
எமக்கு அச்சம் தரும் எண்ணங்கள் வரலாம். ஆனால் அவை எப்பொழுதும் உண்மையாக இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் சந்திக்கும் சங்கடங்கள், அச்சங்கள் எல்லாம் நாம் எங்களை சரியின் பக்கம் மாற்றிக்கொள்வதற்கான விடயங்களாக கருதவேண்டும். சோதனைகள் ஏற்படும் போது அவற்றிலிருந்து நல்ல மாற்றங்கள் காண எம்மை தயாரக்க வேண்டும்.
நாம் முகம் கொடுக்க வேண்டும் என்று மனஉறுதியோடு செயற்பட்டால் நாம் எதனுடன் போராடுகிறோமோ அதை நலவின் பக்கம் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு சக்தி எம்மில் பிறந்துவிடும். எம்மில் மாற்றத்தை காணவேண்டும் என்று நாம் விரும்பினால் உண்மையிலேயே அந்த விருப்பம் எம்மில் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும்.
நேற்று நடந்ததையும் நாளை நடக்கப் போவதையும் எண்ணிக்கொண்டிருக்காமல் இப்போதைய நேரத்தில் வாழ வேண்டும். மனவலிமை மற்றும் மனஉணர்ச்சி ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு இது மிகவும் முக்கியமாகும்.
எமது உள உடல் வலிமைகளை பிரச்சினையொன்றால் சோர்வடைய விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் திறன் வெற்றிக்கான முதல் தேவையாகும்.
மிகச்சிறந்த எண்ணங்களால் மனவலிமையை வளர்த்து தைரியமான மனிதர்களாக வாழ்வோம்.
………………………
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்