அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அருளியதன் மூலம் புனித ரமழான் மாதத்தை சங்கைப்படுத்தியுள்ளான். ரமழான் துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டல்களோடும் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபடும் மாதமுமாகும்.
கடந்த காலங்களை விட மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் நாம் இப்புனித ரமழான் மாதத்தை சந்திக்கவுள்ளோம். தற்போது உலகளாவிய ரீதியில் பரவிவரும் COVID 19 வைரஸின் தாக்கத்தினால் பெரும்பாலான நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. எமது நாட்டு அரசாங்கமும் இதன் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் குறிப்பாக, மக்கள் ஒன்றுகூடுவதனை முற்றாக தடுத்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதையும் நீங்கள் அறிவீர்கள்.
எனவே, முஸ்லிம்களாகிய நாம் நாட்டு சட்டத்தை மதிப்பவர்கள் என்ற வகையில் ரமழான் காலத்தில் மேற்கொள்ளும் நல்லமல்களை பின்வரும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளுமாறு அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.
ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் வழிகாட்டல்களும்:
  1. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிமிக்க சூழல் நீங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பவும் எமது தேவைகள் நிறைவேறவும்; நாட்டு மக்கள் சுபிட்சமா வாழவும் பிரார்த்தித்தல். நோன்பு திறக்கும் நேரம், ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரங்களை அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளல்.
  2. அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடனான இறுக்கமான தொடர்பை அதிகரித்தல் வேண்டும். மேலும் அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் போதனைகளை தமது வாழ்வில் எடுத்து நடப்பதும், பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுவதும் அல்குர்ஆன் மீதான எமது கடமைகள் ஆகும்.
  • மக்தப் மற்றும் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு நாளாந்தம் குர்ஆன் ஓதுவது தொடர்பான வழிகாட்டல் ஒன்று மக்தப் தலைமையகத்தால் வெளியிடப்பட்டவுள்ளது. அதற்கமைவாக பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வழிகாட்டி ஆர்வமூட்டுவதுடன் அதனை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.
  • இமாம்கள், மத்ரஸா உஸ்தாத்மார்கள், மக்தப் முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள், முஆவின்கள் என அனைவரும் இக்காலத்தை உச்சளவில் பயன்படுத்தவும். முடியுமானவர்கள் சமூக வலைத்தளங்களை முறையாக பாவித்து மக்களுக்கு அல்குர்அனை ஓதுதல், கற்றல், கற்பித்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.
  • ஓவ்வொரு தனி நபரும் அதிகமதிகம் அல்குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு ஜுஸ்உவையாவது ஓத முயற்சித்தல்.
  1. தற்கால சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஐங்காலத் தொழுகைகள் மற்றும் தராவீஹ் போன்ற ஏனைய தொழுகைகளை தத்தமது வீடுகளில் தமது வீட்டாரை மாத்திரம் இணைத்துக் கொண்டு ஜமாஅத்தாக தொழ ஏற்பாடு செய்தல். அயலவர்கள், அக்கம் பக்கத்தவர்களோடு சேர்ந்து கூட்டாக தொழுவதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளல்.
  2. ஒவ்வெரு வீட்டிலும் அன்றாட வணக்க வழிபாடுகள், நல்லமல்கள், ஏனைய வேலைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் நேர அட்டவணை ஒன்றைத் தயாரித்து குடுப்பத்தினர் அனைவரும் அதன்படி செயற்பட ஒழுங்குகள் செய்தல்.
  3. ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதற்கமைவாக ஐங்கால தொழுகைகளுக்காகவே, ஜுமுஆ மற்றும் ஏனைய வணக்கங்களுக்காவே மறுஅறிவத்தல் வரை மஸ்ஜித்களில் மக்கள் ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளல். இது குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபையினால் வழங்கப்படும் வழிகாட்டல் மற்றும் அறிவித்தல்களை மஸ்ஜித் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்யாது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
  4. ஜம்இய்யதுல் உலமா, பொலிஸ் தலைமையகம் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஏலவே வெளியிட்டிருக்கும் வழிகாட்டல்களுக்கமைவாக நடந்து கொள்ளுமாறு வினயமாக வேண்டுகிறோம்.
  5. இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் வீட்டில் இருந்தவாறே இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். அதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்த்துக் கொள்ளல். குறிப்பாக, சமூக வலைத்தளங்களிலும் வேறு அநாவசியமான விடயங்களிலும் நேரத்தை வீணடிப்பதை முற்றாக தவிர்த்தல்.
  6. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானமாக நடந்து கொள்ளல்.
  • இது விடயம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனத்தை தவறாமல் அனைவரும் வாசிப்பதுடன் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.
  • ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட “சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை” எனும் நூலை வாசித்து பயன் பெறல்.
  1. அன்றாடம் உழைத்து உண்ணக்கூடிய மக்கள் அத்தியவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதனால் மஸ்ஜித்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல்.
  • மனிதநேயமிக்க மக்களாகிய நாம் இன, மத வரையறைகளுக்கு அப்பால் தேவையுடையோரை இனங்கண்டு அவர்களுக்கு எமது ஸதகாக்கள், ஹதியாக்களை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • ஸகாத் வழங்க தகுதியானவர்கள் அதன் முறைகளை ஆலிம்களுடன் தொடர்பு கொண்டு உரிய முறையில் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தல்.
  1. நிவாரணப் பணிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் தமது பிரதேச பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு பூரண அனுமதியுடன் அதனை மேற்கொள்ளல்.
  2. தமது வீடுகளில் இரவு நேர வணக்கவழிபாடுகளில் ஈடுபடும்போதும் குறிப்பாக ஸஹர் நேரத்திலும் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்து வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மாத்திரம் கேட்கும்படி வைத்துக் கொள்ளல்.
  3. வாலிபர்களுக்கு வழிகாட்டுவதில் உலமாக்கள், பிரதேச மக்கள் என அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அவர்களது கால நேரம் அல்லாஹ்வுக்கு விருப்பமான முறையில் அமைவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் அவசியம்.
  4. ஒரு நோன்பாளி சாதாரன எச்சிலை விழுங்குவது நோன்பை முறிக்காது என்பதே மார்க்கத்தின் வழிகாட்டலாகும். என்றாலும் வழமைக்கு மாற்றமான நெஞ்சுசளி, சளிகட்டி  பேன்றவைகளை உமிழவேண்டியுள்ளது. இதன் போது கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக உரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே பொது இடங்களில்; உமிழ்வதை தவிர்த்துக் கொள்வதுடன், சுகாதார ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.  
  5. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்.

எனவே, இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் முழு உலகையும் பீடித்திருக்கும் இந்த கொரோனா வைரஸின் தீங்கிலிருந்து அனைவரையும் பாதுகாத்து நம் நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு மிளிர்ந்து, மக்கள் புரிந்துணர்வோடு வாழ நல்லருள் பாலிப்பானாக!
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.