கலாநிதி ஷுக்ரி அவர்கள் சுகயீனம் அடைந்திருப்பதாக கேள்வியுற்றதும் மிகவும் கவலையாக இருக்கின்றது. சமூகத்தில் நிகழ்காலத்தில் இருக்கின்ற சிறந்த அறிஞர்களில் ஒருவர். குறிப்பாக இன்றைய காலத்தில் அதிகமானவர்கள் கொஞ்சம் தெரிந்த விடயங்களை வைத்துக்கொண்டு அதிகம் படம் காட்டுபவர்கள்தான் அதிகம். ஆனால் கலாநிதி ஷுக்ரி அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்தாலும் சாதாரண மனிதராகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இயக்க வெறி இல்லாதவராகவும்,  தன்னை மக்கள் போற்ற வேண்டும் என்ற பதவி மோகம் இல்லாதவராகவும் இருப்பதுதான் அவரது சிறப்பம்சமாகும். இன்று காலை எனது தந்தையுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தினார்.
1984 ம் ஆண்டு நாம்புலுவ,  பசியாலை பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இயக்கம் ( 03 வக்து தொழுகை) தீவிரமடைந்து சென்று கொண்டிருந்த போது அப்போதிருந்த உலமா சபைக்கும் குறித்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் விவாதம் ஒன்று நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்ற போது  யாரை நடுவராக போடுவது என்று சிந்தித்துக்கொண்டிருக்கும்போது அப்போதிருந்த அனைத்துத் தரப்பினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்தான் கலாநிதி ஷுக்ரி அவர்கள்.

விவாதம் நடைபெற்ற தினம் குறிப்பிட்ட நேரத்திற்கே அந்த இடத்திற்கு அவர் சமூகம் கொடுத்தாராம் ( நேர முகாமைத்துவம்) விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இரண்டு குழுக்களுடனும் தனித்தனியாக கலந்துரையாடலினை மேற்கொண்டாராம்.

அதன்பின்னர் தலைமையுரையுடன் விவாதத்தை ஆரம்பித்த போது  விவாதத்திற்குரிய ஒழுக்க விதிகளை பகிர்ந்து கொண்டாராம்.

1. ஒருவர் பேசும்போது மற்றவர்கள் அமைதியாக இருக்கவேண்டும். அவர் பேசி முடிந்தபின்தான் ஏனையவர்கள் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

2. சபையில் இருப்பவர்கள்தான் முடிவெடுப்பார்கள் எந்த கருத்து சரியானது என்று.

3. உலமா சபை சார்பாக அதிகமான உலமாக்கள் வருகை தந்திருந்தாலும் இரண்டு உலமாக்களுக்குத்தான் பேசுவதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஏனைய உலமாக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க விரும்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உலமாக்களினூடாகவே முன்வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்வாங்கப்பட்டது.

காலை 07.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட விவாதம் இரவு வரைக்கும் தொடர்ந்தது. இறுதியாக கலாநிதி ஷுக்ரி அவர்களின் முடிவுரை இடம் பெற்றது. முடிவுரையின் போது தான் அனைவருக்கும் விளங்கியது கலாநிதி ஷுக்ரி அவர்களின் ஆளுமை.

ஏனென்றால் அந்த அளவிற்கு தேவையான விடயங்களை தொகுத்திருந்தார் மற்றும் பல மணித்தியாலயங்கள் அந்த விவாதம்இடம் பெற்றாலும் சிறு பிரச்சினை கூட ஏற்படாமல் நிறைவு பெற்றமைக்கு கலாநிதி ஷுக்ரி அவர்களின் வழிகாட்டலும் தலைமைத்துவமும்தான் காரணம் என எனது தந்தை கூறினார்.

குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் கலாநிதி ஷுக்ரி அவர்களின் தேக ஆரோக்கியத்திற்காக துஆ செய்வோம்.

நன்றி
அஹமட் மனாஸ் மகீன்
நிறைவேற்றுப் பணிப்பாளர்
கபே அமைப்பு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.