மக்களை முன்னிறுத்தி, அவர்களது நலன்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இடையூறை ஏற்படுத்துகின்றது என்பதே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமை வெளிப்படுத்துகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும் ரஞ்சன் ராமநாயக்க மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச் சாட்டுக்களை நீக்கி, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இதற்கு முன்னர் பாலித தெவரப்பெருமவை கைது செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய நெருக்கடி நிலையில் பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொருட்களை பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர்கள் பதுக்கியதாக செய்திகள் வெளிவந்தன.

எனினும் அவை குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத அரசாங்கம், எதிரணியினரை மாத்திரம் இலக்கு வைத்துச் செயற்படுவது கடும் விசனத்திற்குரியதாகும்.
இப்போதைய சவாலுக்கு திறம்பட முகங்கொடுக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.

எனினும் அந்த உண்மை எதிரணியினரின் திறமான செயற்பாடுகளால் வெளிப்படுவதைத் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்வதை விடுத்து மக்களுக்கு சேவையாற்றுவோருக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கும் விதமாகவே அரசாங்கம் தற்போது செயற்பட வேண்டும்.

தேசிய நெருக்கடி நிலையொன்றைப் பயன்படுத்தி, அதனூடாக தமது தனிப்பட்ட அரசியல் நலன்களை அடைவதற்கு முயற்சி செய்வதால் அரசாங்கம் அபகீர்த்தியையே அடைய நேரிடும்.

எனவே பாலித தெவரப்பெரும ரஞ்சன் ராமநாயக்க போன்ற மக்களுக்கு சேவையாற்றுவோருக்கு இடையூறு ஏற்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

ரஞ்சன் ராமநாயக்க மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை நீக்கி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

(நா.தனுஜா)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.