எமது தரப்பிலிருந்து சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக இன்றைய தினம் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

எமது தரப்பிலிருந்து சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறைந்தபட்ச ஊடக தர்மத்தையேனும் பின்பற்றாமல் குறித்த சிங்கள ஊடகத்தினால் செய்தியொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இச்செய்தியை நாம் முற்றாக மறுக்கிறோம்.

நீண்ட வரலாற்றைக் கொண்ட, சிரேஷ்ட தலைவர்களால் நிர்வகிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று இத்தகைய பொய்யான வதந்திகளுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும். பெருமளவான ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய, அரசாங்கத்துடன் சூழ்ச்சிகரமான 'டீல்களை' செய்துகொண்ட, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் இரண்டு, மூன்று பேரால் நிர்வகிக்கப்படும் அணியில் இணையவேண்டிய அவசியம் ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள எவருக்கேனும் இருக்குமென நாம் கருதவில்லை.

தற்போதைய நெருக்கடி நிலையில் அரசியல் நலன் நோக்கங்களை விடுத்துஇ நாட்டின் நலன்கருதி செய்யவேண்டிய பல்வேறு விடயங்கள் உள்ளன என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.