இலங்கை CoViD-19 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்கள் சம்பந்தமான அரச வைத்தியர் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) என்பன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் களங்கப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த அறிக்கை கண்டனத்துக்குரியது.

CoViD-19 தொற்றிலிருந்து இலங்கை வெளியேறுவதற்கான வழிகாட்டல்கள் எனும் குறித்த இவ்வறிக்கை ஜனாதிபதி அவர்களுக்கு 2020 ஏப்ரல் 4ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை அவமானப்படுத்தி, இன குரோதத்தை ஏற்படுத்தும் குறித்த அறிக்கையில் “முஸ்லிம் சனத்தொகை” CoViD-19 தொற்றை பரப்பும் மாறிகளுள் ஒன்றாக   அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை நேரடியான கண்டனத்துக்குரியது.

நான் இந்த அறிக்கையை தயார்படுத்திக்கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட ஆவணத்தில் முஸ்லிம்களை CoViD-19 ஊக்குவிப்பு மாறியாக காட்டும் வாசகம் திருத்தப்பட்டிருப்பதை அறிந்தேன். ஆனாலும், குறித்த ஆவணம் ஏற்கனவே வெளியிடப்பட்டு, சுற்றுக்கும் விடப்பட்டுள்ளதால் நான் இந்தக் கண்டனத்தை பதிவுசெய்வது அவசியமாகின்றது.

“இலங்கை COVID-19 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்களை வெளிப்படுத்தும் இலங்கை அரச மருத்துவர் சங்கம், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் என்பவற்றின் அறிக்கை”யில் பிரதேச செயலாளர் மட்டத்தில் CoViD-19 தொற்றை கட்டுப்படுத்தும் ஏனைய 3 மாறிகளுடன் முஸ்லிம்களின் சனத்தொகையும் ஒரு மாறியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் தரப்பட்டுள்ள மாறிகள் பின்வருமாறு;

1. CoViD -19 நோயாளிகளின் எண்ணிக்கை
2. தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை
3. சனத்தொகை செறிவு
4. முஸ்லிம் சனத்தொகை (பிரதேச செயலாளர் மட்டத்தில்)

முஸ்லிம் சனத்தொகை செயலாளர் பிரிவு மட்டத்தில் CoViD-19  பரவலுக்கான ஆபத்துக் காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை இங்கு தெளிவாக காணமுடிகிறது.

அறிக்கையின் 19ஆவது பக்கத்தில், ஒவ்வொரு மாறிக்கும் கொடுக்கப்பட வேண்டிய பெறுமான  அட்டவணை ஒன்றும் தரப்பட்டுள்ளது. அந்த பெறுமான அட்டவணையில் “முஸ்லிம் சனத்தொகை” என்ற மாறிக்கு அதிஉயர் குணகப் பெறுமானம் கொடுக்கப்பட்டுள்ளது. அது 0.9446 ஆகும். இது CoViD-19 நோயாளி என்ற மாறிக்கு கொடுக்கப்பட்டுள்ள 0.8260 என்ற குணகப் பெறுமானத்தை விடவும் உயர்வானதாகும்.

இலங்கையில் ஒரு புவியியல் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் மட்டத்தில் முஸ்லிம் சனத்தொகையை ஒரு புள்ளிவிபர தொகுதியில் CoViD-19 தொற்றுக்கான ஆபத்துக் காரணியாக வகைப்படுத்துவதற்கான விடயத்துக்கு தொற்று தொடர்பான எந்த அடிப்படையும் இல்லை. இது விடயமாக CoViD-19 தொற்றுக்கான காரணிகளுள் ஒன்றாக ஓர் இனத்தை பெயர் குறிப்பிடுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.

குறித்த அறிக்கையை நாங்கள் கேள்விக்குட்படுத்துகிறோம் என்பதோடு, ஏனைய மதங்களுக்கு  மாறுபட்ட வகையில் செயலாளர் பிரிவு மட்டத்தில் முஸ்லிம் சனத்தொகையை தனிப்படுத்தி  ஏனைய புள்ளி விவர தொகுதிகளுடன் எவ்வாறு அடையாளப்படுத்த முடியும் என்று இந்த அறிக்கையை தயாரித்தவர்களிடம் கேட்கின்றோம்.

அதேசமயம், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கலாநிதி சஞ்ஜீவ வீரரத்ன, தனது டுவிட்டர் பதவில் இந்த அறிக்கை வரம்பு மீறியதும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் சம்பந்தப்படாததுமான “ஒரு குப்பை” என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முஸ்லிம் சனத்தொகையை ஒரு மாறியாக பயன்படுத்துவது அறிவு சார்ந்த குறைபாட்டைக் காட்டுவதாகவும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது என்பதோடு, இந்த அறிக்கையுடன் தான் ஒருபோதும் உடன்படவில்லை என்றும் இவ்வாறான மோசமானதொரு செயற்பாட்டுடன் தன்னால் ஒருபோதும் இணங்கிப்போக முடியாது என்றும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினருக்காக தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது .

இந்த அறிக்கையானது ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான இனத் துவேஷத்தை வளர்க்கும்  கலாசாரத்தை கற்பிக்கும் செயற்பாட்டுக்கு மிகத் தெளிவான சான்றாகும். எந்தவொரு தெளிவான காரணங்களும் இல்லாக நிலையில், முஸ்லிம்களை வேண்டுமென்றே  களங்கப்படுத்துவதும் ஓரங்கட்டுவதும் இதன் நோக்கமாகும்.

இப்போது நடந்தேறும் சிறுபான்மை மக்களை உளவியல் ரீதியாக ஓரங்கட்டும் நவீன யுக்திகளில் இதுவும் ஒன்றாகும். இரகசியமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பாரபட்சமான விபரக் குறிப்புகள் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் “தெளிவான உண்மைகள்” என்று சர்வதேச மயப்படுத்தப்படுகிறது. இவ்வாறான துணைபுரை பிணைப்புக்கள், சிறுபான்மை இனத்தை காலாசார ரீதியாக ஓரங்கட்டும் நிறுவனமயப்படுத்தலுக்கு பெரிதும் துணை போகின்றன. இது கண்டிக்கப்படவேண்டிய சமூக அநீதியாகும். அத்துடன் சமூக கட்டமைப்பை தகர்க்கும் வன்முறையுமாகும் .

இந்த அறிக்கையானது அதன் அசல் வடிவத்தில் பலருக்கும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. எனக்கும் இது கிடைக்கப்பெற்றுள்ளது. என்னைப்போல பலரும் இதனை பெற்றக்கொண்டுள்ளனர். இந்த அறிக்கையை உடனடியாக நிராகரிக்குமாறும், முஸ்லிம் சனத்தொகையை CoViD-19 ஊக்குவிப்பு மாறியாக குறிப்பிட வேண்டாம் எனவும், பாரபட்சமான கணித்தல் முறையை ஒரு இனத்துக்கு எதிராக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை  இனங்களுக்கும் அநீதியானதும்  பக்கச்சார்பானதுமான முறையில் CoViD-19 தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடு என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இப்படியான செயற்பாடுகளை அரசு மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். நாங்களும் இலங்கையரே, எங்களையும் சமமாக கணித்து நடத்துமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம்.

மக்கள் அரசாங்கத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட வேண்டாம். முஸ்லிம்களை தனிமைப்படுத்தி பார்ப்பதை நிறுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் உண்டாகிவரும் ஆழமான பிரிவினைகளை தவிர்க்கலாம்.

ரவூப் ஹக்கீம்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.