கஹட்டோவிட்ட சிபான்



மரங்கள் என்பது “வானம் பார்த்து மழைக்கு இறைஞ்சும் பூமியின் கரம்” என அடக்கிவிடலாமோ அறிவுலகம்தான் அதையேற்குமோ?செடியென்றும் கொடியென்றும் விண்ணுயர்ந்த விருட்சகமென்றும்... இன்னும் எத்தனை வகைகளுண்டோ யாரறிவார்.. பச்சையம்கொண்ட தாவரம் சூரியவொளி முன்னிலையில் காபனீரொட்சைட்டையும் நீரையும் உள்ளெடுத்து ஒட்சிசனையும் குளுகோசையும் வெளியீடாய் நிகழ்த்தும் செயன்முறையை ஒளித்தொகுப்பென்பதுபோல் பகுத்து ஆராய்ந்து அணுக வேண்டிய பெரும்புதிர் மரங்களென்பேன். 

குற்றங்கள் மொத்தம் ஐந்து. “மரம்நடாமல் மரணிக்கும் மனிதன்”ஆறாவது குற்றம்.வாழ்நாளில் குறைந்தது ஒருதடவையாவது மரம் நடுதலே வாழ்வதற்கான தகுதிபெறும் கடவுச்சீட்டு. பறவைகளுக்கு,விலங்கினங்களுக்கும் ஆதிகால மனிதர்க்கும் உறைவிடமாகவும் காடு இலங்கியவை அறிந்தவை.

வறட்சியின் போது மஞ்சள் உடுத்தும் அழகு எத்தகையது. மழைச்சாரலின்போது  புன்னகைத் துளிர்விடும் மங்கையவள் எத்தனை அழகானவள்.. இலையுதிர்கால மரங்களின் நிர்வாணம் மனங்களில் ஏற்படுத்தும் வலி எத்துனை கொடிது.

ஆராய்ந்து பார்க்கிறேன் எவ்வாறு மக்கட்பண்பில்லாதவர்களை மரங்கள் என்றார்? ஏகலைவன்கள் எல்லாம் சும்மா.. கட்டைவிரலைக் கொடுத்துவிட்டு அதனைக் கூவித்திரகிறார்கள்.மரங்கள் தம்மையே அர்ப்பணிக்கும் தியாகிகளல்லவா. அவ்வாறாயின் பண்பிலாதவர்களாக உயர்திணை அல்லாத திணையாக எவ்வாறு வருவது என்பது மனம்சுடும் நீண்டநாள் வினா.. 

மனிதக்காடுகளில் செடி,கொடி,விருட்சகங்களாக எளியோர்,வலியோர்,மெலியோர்கள் எனப் பலர். அவர்களுள்  வறட்சியில்லாத இன்பச்சோலை மட்டும் அடைந்த மனிதர்கள் எங்குள்ளார்கள். எல்லோர் வாழ்வும் வறட்சியும் பசுமையும் பணம்குன்றும்போது அறுத்துச்செல்லும் இலையுதிர்காலமாய் உறவுகள் எனப்பலவுள. வறனுறலறியாச்சோலையாக மனிதன் மாற பெரிதாயொன்றும் தேவையில்லை அன்பு,அரவணைப்பு,வறட்சியின்போதான பரிவும் பாசமும் இவைகள்தாம் மனிதனை உயிர்போடு வைக்கின்றன. 

என்னடா இது வாழ்க்கை என வறண்டு கரடாகி காய்ந்து பாலைவனமாகிப் போனபின் சிறுமழையில் துளிர்த்து மணக்கும் மலருக்குக் காதல் என்று பெயர்..


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.