கொவிட் 19 தொற்று நிலைமையினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பிள்ளைகளை மிகவும் உறுதியான மற்றும் வலுவான அணுகுமுறைகளுடன் மேம்படுத்தும் திசையினை நோக்கி கல்வியினை நகர்த்த வேண்டும் என கண்டி, தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அதுல சுமதிபால அவர்கள் தெரிவித்தார்.
இந்நிலைமையினை உருவாக்குவது ஆசிரியர்கள், பெற்றோர்களைப் போன்று ஊடகங்கள் உட்பட முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.
'கொவிட் தொற்று, பிள்ளை பரம்பரை மற்றும் பிள்ளைகளின் கல்வி' எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே பேராசிரியர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். ஊடக கலந்துரையாடல் இன்று (01) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், கொவிட் 19 தொற்றுக் காலப்பகுதியில் பிள்ளைகளின் கல்வியினை போன்று அவர்களின் மனநிலை மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட பின்னடைவினை எதிர்நோக்கும் அபாய நிலை உருவாகியுள்ளமையினால், அதனை வெற்றிக் கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார். பிள்ளைகள் மீள பாடசாலைக்கு வருகை தந்தவுடன் மிகவும் அன்பாக அவர்களின் மனநிலையினை புரிந்துகொண்டு செயற்படுவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தல் வேண்டும்.
இந்த காலப்பகுதியில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகவும் பொறுமையாகவும், புரிதலுடனும் செயற்படல் வேண்டும். ஊடக நிறுவனங்களும் பிள்ளைகளின் மனநிலை மட்டத்தினை சிறந்த முறையில் பராமரிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதன் நிகழ்ச்சிகளை பிரச்சாரம் செய்வது முக்கியமான விடயமாகும். இதற்காக கொவிட் 19 தொற்று நிலைமையினுள் கூட நாட்டினுள் ஏற்பட்டுள்ள நேர்முகமான சம்பவங்களை அறிக்கையிடுவது பொருத்தமானதாகும். வீட்டினுள் முடங்கி கிடக்கின்ற பிள்ளைகளுக்கு சந்தோஷம் மற்றும் உரிய புரிந்துணர்வினை பெற்றுக் கொடுக்கின்ற செய்திகளை பரிமாறுவது ஊடகங்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.
ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் சிறுவர் நோய் விசேட வைத்தியர் பேராசிரியர் சமன்மாலி சுமனசேன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்வி என்பது பாடசாலை சூழலில் மேற்கொள்ளப்படுகின்ற கற்றல் நடவடிக்கையுடன் சுருங்கிக் கிடக்கின்ற விடயமன்று பரந்த விடயதானங்களை உள்ளடக்கிய விடயமொன்றென தெரிவித்தார். கல்வி என்பது தாயின் மடியில் சிசுவாக இருக்கும் காலத்திலிருந்தே குழந்தையானது கல்வியினை பெற்றுக்கொள்கின்றது. அதனால் பாடசாலையில் மாத்திரமன்றி முழு சூழலிலும் பிள்ளைகள் கற்றுக் கொள்வதாகவும், அவர்களின் மனநிலை ஆரோக்கியம் தொடர்பிலும் அவ்விடயம் பாதிப்பு செலுத்துவதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றினால் மிகவும் பாதிப்புக்குள்ளானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலும், கிராமிய பிரதேசங்களிலும் வாழ்கின்ற பிள்ளைகளாவர். சில குழந்தைகளுக்கு வீடுகளில் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கும், குழப்பங்களுக்கும் நிம்மதியானதொரு சூழலொன்றை வழங்கும் இடமாக பாடசாலை விளங்குகின்றது. பாடசாலை மூடப்பட்டுள்ளமையினால் அவ்வாறான குழந்தைகளுக்கு மேலும் குழப்பமான சூழ்நிலையினை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குழந்தைகளின் தொடர்ச்சியான கல்வியினை போன்று மனநிலை ஆரோக்கியம் தொடர்பிலும் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
குழந்தை மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின், சமூக சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் ஆசிரி ஹேவாமாலகே அவர்கள் ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், கொவிட் 19 தொற்று காலப்பகுதியிலும் கூட இலங்கையில் குழந்தைகள் பல்வேறு முறைகளின் ஊடாக கல்வி நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர் என்று தெரிவித்தார். இது பிள்ளைகளுக்கு புதியதொரு அனுபவமொன்றாக காணப்பட்டதுடன், இந்ந நிலைமையானது இதுவரை பயன்படுத்தாத நவீன தொழில்நுட்ப முறைகளுடன் பழகுவதற்கான சந்தர்ப்பத்தினை அவர்களுக்கு அது வழங்கியது எனவும் தெரிவித்தார்.
புத்தக அறிவை தாண்டிய பரந்த, ஆக்கபூர்வமான அறிவினை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கே 21ம் நூற்றாண்டில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கின்றது. தொழில்நுட்ப அறிவு, ஊடக அறிவு, குழுவேலையின் மூலம் பிள்ளைகளின் ஆற்றலினை அறிந்து கொள்ளல் போன்றவை கல்வியின் மூலம் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய திறன்களாகும். இலங்கையின் கல்வி துறையும் இப்பரந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியது அத்தியாவசிய தேவையொன்றாக கருதப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையினுள் பிள்ளைகளின் குழு உணர்வும், சமூகத்துடன் இசைந்து செல்லும் மனப்பாங்கும் குறைவடைந்துள்ளது. அதனால் மீள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் குறுகிய காலத்தினுள் விடயதானத்துடன் இணைந்ததாக அறிவினை வழங்குவதற்கு முதன்மை இடத்தை வழங்குவதற்கு பகரமாக இவ்வாறான திறன்களை விருத்தி செய்து, பிள்ளைகளின் மனநிலை மட்டத்தினை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கவதே மிகவும் பொருத்தமானது என விசேட வைத்திய நிபுணர் சுட்டிக் காட்டினார். இதற்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டியது ஆசிரியர்களதும் பெற்றோர்களதும் பொறுப்பாகும்.
மொஹான் சமரநாயக்க
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்