( மினுவாங்கொடை நிருபர் )

   கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, 9 வாரங்களாக நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "ஜும்ஆ", மீண்டும் (22) வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளதையிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவுக்கும், பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் அஷ் - ஷெய்க், அஸ் - ஸெய்யிது, கலாநிதி ஹஸன் மெளலானா ( அல் - காதிரி ) வுக்கும், இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

   நாட்டிலுள்ள எந்தவொரு மதஸ்தானத்திலும், கூட்டாக மத அனுஷ்டானங்களைச் செய்வதற்கு அனுமதியளிக்கப்படாத நிலையில், "ஜும்ஆத் தொழுகை"யை பள்ளிவாசல்களில் நடாத்த முதற்கட்டமாக இடம் ஒதுக்கி, முஸ்லிம்களை கெளரவித்துள்ளமைக்காகவும், பிரதமர், பிரதமரின் இணைப்பாளர் மற்றும் டாக்டர் அசேல குணவர்தன ஆகியோருக்கும் முஸ்லிம்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

   நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான 19 ஆம் திகதி ( செவ்வாய்க்கிழமை ) யன்று "மெளலிதுர் ரஸூல்" வைபவம் மற்றும் சமய நிகழ்வுகளை  பள்ளிவாசல்களில் நடாத்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஹஸன் மெளலானா, கடந்த 15 ஆம் திகதி நேரடியாகச் சென்று கடிதமொன்றைச் சமர்ப்பித்து விசேட அனுமதி கேட்டிருந்தார்.

   இதற்கமைய, 19 ஆம் திகதியன்று 50 பேர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக, சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக "மெளலிதுர் ரஸூல்" வைபவம் மற்றும் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை  நடத்துவதற்கு, 15 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தில் விசேட அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

   இந்த விவகாரத்தால் மகிழ்ச்சியடைந்துபோன முஸ்லிம்கள், "ஜும்ஆத் தொழுகை"க்கான அனுமதியையும் பெற்றுத்தருமாறு ஹஸன் மெளலானாவிடம் வேண்டிக் கொண்டனர்.

   இதனையும் கருத்தில் எடுத்துக் கொண்ட ஹஸன் மெளலானா, சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தை உடனடியாகச் சந்தித்து, "ஜும்ஆ"வுக்கான அனுமதியையும் பெற்றுத் தருமாறு அவரிடம் வேண்டிக் கொண்டார். 

   இதன் பிரதிபலனாகவே, 50 பேருக்கு மேற்படாமல், சுகாதார வழி காட்டல்களுக்கு ஏற்றவாறு "ஜும்ஆப் பிரசங்கம்" மற்றும் "ஜும்ஆத் தொழுகை" ஆகியவற்றை, (22) வெள்ளிக்கிழமை முதல் நடாத்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவினால் விசேட அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

   இதேவேளை, "எந்த ஒரு கூட்டு மத அனுஷ்டானங்களுக்கும் சுகாதார அமைச்சு இடம் வழங்காத போதும், முதன் முறையாக ஜும்ஆ வுக்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் அஸ் -  ஸெய்யிது ஹசன் மௌலானாவின் வேண்டுகோளின் நிமித்தம் விசேட அனுமதி வழங்கி இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல் பிரதமர், இணைப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன ஆகியோருக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாக", கொழும்பு தெற்கு -  களுபோவிலை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் டாக்டர் அஹ்மத் ரிஷி, தனது முகநூலில் 22 ஆம் திகதி பதிவிட்டுள்ளார்.

   கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, 2021 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல், ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை (9 வாரங்கள்), நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் தற்காலிகமாக " ஜும்ஆ" இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

23/10/2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.