சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவுகள் மற்றும் காஸ் அடுப்புகள் வெடிப்பு,அவற்றுக்குப் பொருத்தப்படும் குழாய்களில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வர்த்தக அமைச்சு சார் ஆலோசனை குழுவின் விசேட கூட்டத்தில்நேற்று (01) விரிவாக ஆராயப்பட்டபோதிலும், எவ்விதமான இறுதிமுடிவுகளும் எட்டப்படாது கூட்டம் நிறைவடைந்தது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (01) இக்குழு கூடியது. இதில், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, லிற்றோ, லாப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சிலிண்டரில் வாயு கலவை அளவு மாற்றத்தினாலேயே இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் கருத்துரைத்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் (30) மாத்திரம் நாடுமுழுவதிலும் 34 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதென பொலிஸார் இதன்போது சுட்டிக்காட்டினர்.

ஆகையால், இந்த விடயம் தொடர்பில் காலந்தாழ்த்தாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் வலியுறுத்தினார்.

தற்போது சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சிலிண்டர்களை மீள பெறவேண்டுமென சஜித் வலியுறுத்தினார். எனினும், சிலிண்டர்களில்பொருத்தப்படும் ரெகுலேட்டர், குழாயில் உள்ள பிரச்சினைகளால் இவ்வாறான சபவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தில் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பா.நிரோஸ் - தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.