பத்திரிகை வாசகர்களுக்கும் வானொலி நேயர்களுக்கு பரிச்சயமான ஒரு பெயர்.  ஆனால் முகம் தெரியாத நபர். அவரது முகம் தெரிந்த வாசகர்கள் மற்றும் நேயர்கள் இல்லை என்றே கூறலாம். எந்த மேடையும் ஏறாமல் தனது இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள்ளே பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பராமரித்துக் கொண்டு தனது கணவரினதும்   மகனினதும் தொழிலுக்கு முழுமையாக ஒத்தாசையாக இருந்துகொண்டே நூற்றுக்கணக்கான கவிதைகள் , சிறுவர் பாடல்கள் , சிறுகதைகள் , உருவகங்கள் என ஏராளமான படைப்புகளை எவ்வித ஆரவாரமும் இன்றி இலக்கிய உலகுக்கு தந்தவர். இவரது செயற்றிறன் பிரமிக்க வைக்கிறது. 


வானொலியில் ஒளிபரப்பாகிய இவரது ஆக்கங்கள் மிகப்பல. குறிப்பாக ‘ஊடுருவல் - சமூகச் சித்திரம்’  இவரது ஆக்கங்கள் மிக அதிகமாக இடம் பெற்ற நிகழ்ச்சி ஆகும். வெறும் கற்பனா உலகில் சஞ்சரிக்காது தனது வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பாத்திரங்களைக் கொண்டே படைப்பாக்கம் செய்தார். அதேவேளை ஓவியம் வரையும் திறனும் இயல்பாகவே வரப்பெற்றிருககும் இவர்,  கடந்த நூற்றாண்டின் ஐம்பது அறுபதுகளில் திஹாரியில் சமூக சேவையின் பிதாமகராக விளங்கிய ஐ. அப்துர் ரஹ்மான் ஆசிரியரின் மூத்தமகள் ஆவார்.  இயல்பாகவே சமூகப் பற்று இவரில் மிகுந்து காணப்பட்டது.  பல்லாண்டுகள் பூகொட -  குமாரமுல்ல  அஹதியா பாடசாலை அதிபராகவும்  பூகொட ஐக்கிய முஸ்லிம் சங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 


திஹாரி அப்துர்ரஹ்மான் - உம்மு ரஹ்மா தம்பதிகளின் மூத்த மகளான இவர் குமாரிமுல்ல  எம் .எம் .எம் .ஸக்கரியா அவர்களை கரம் பிடித்து இல்லற வாழ்வில் பிரவேசித்து நான்கு குழந்தைகளுக்குத் தாயானார். 


செந்தூரம் , நவமணி , தினகரன் , சுடரொளி , ஜெஸ்மின் என பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியான அவரது நூற்றுக்கணக்கான ஆக்கங்களில் தேர்ந்த சில படைப்புகள் அவரது முதலாவது நூலில் உள்ளடங்கப் பெற்றுள்ளது. 


“எந்தக் காலம் ?”  எனும் தலைப்பில் சிறுவர்களுக்கான சிறுகதைகளையும் “புறப்படு மகனே” எனும் தலைப்பில் கவிதைகளையும் ஒரே பார்வையில் ஒரே நூலாக வெளியிட்டு எழுத்து இலக்கியத்தில் தடம் பதித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் 24 ஆம் திகதி பிறந்த அன்னார் தனது 61 ஆம் வயதில்  2013 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

தொகுப்பு : பயாஸா பாஸில் 
                      கஹட்டோவிட்ட 
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.