புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகம் சார்ந்தவர்களின் உரிமைகள் மற்றும் பாலின சிறுபான்மை சமூகம் சார்ந்தவர்களின் உரிமைகள்!

-அப்ரா அன்ஸார்-

(ஊடக விளங்கறிவு மையம்(CMIL) நடாத்திய Reform watch நிகழ்ச்சியின் Expert talk இல் பெண் உரிமை செயற்பாட்டாளர் பிஸ்லியா பூட்டோ அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.)


"சிறுபான்மையினர்" என்று ஒரு குறிப்பிட்ட மக்கள் வர்க்கத்தை அழைப்பது சரியா என்ற கேள்வியை தொடுத்தால் நிச்சயம் அது பிழையானது என்று என்னால் கூற முடியும் ஏனெனில் ஒரு நாட்டினுடைய அவ்விருத்திக்கு ஏனைய வர்க்கத்தினர் எவ்வாறு பங்களிக்கின்றனரோ அதே அடிப்படையில் சிறுபான்மையினரின் பங்களிப்பு அமைந்துள்ளது. சிறுபான்மையினர் எனும் போது அதில் குறிப்பாக பாலின சிறுபான்மை மக்களின் உரிமைகளும் உள்வாங்கப்பட்டிருக்கும்.

எனினும் மாற்றுப் பாலின இனத்தவர்களை மனித உரிமைகள் கொண்ட ஒரு சமூகமாக இலங்கையின் சட்டத்துறை மற்றும் கலாச்சாரம் அணுகுவதில்லை இது இலங்கையின் மனித உரிமையை பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது .பல நாடுகள் சிறுபான்மையினருக்கான உரிமைகளை முறையாக வழங்குகின்றனர்.இன்னும் சில நாடுகள் அவர்களை ஒடுக்குகின்றனர். எங்களுடைய நாட்டின் கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால் சிறுபான்மையினர் உரிமை என்பது முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.

ஏற்கனவே உள்ள அரசியல் யாப்பின் 16வது சரத்தின் படி சிறுபான்மையினரின் உரிமைகளும் மாற்று பாலினத்தவர்களுடைய உரிமைகள் சட்டங்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் அதிகாரங்கள் அனைத்துமே தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் ஒடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனியார் சட்டங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் பல்வேறு திருத்தங்கள் தேவைப்படுகின்றது. சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படாது பாதுகாத்துக் கொண்டு செயல்படுதல், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமல் அதனை பாதுகாத்துக் கொண்டு செயல்படுதல் மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை முறையாக செயல்படுவது மிக முக்கியமானதாகும்.கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 196 அங்கத்துவ நாடுகள் இருக்கும் நிலையில் பேரவையின் இரண்டாவது தினத்திலேயே மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையின் பெயர் பிரயோகிக்கப்பட்டது. 

 இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது இலங்கைக்கு எதிராக பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடிய பலம் இருக்கின்றன. எனவே அந்த பலத்தை இல்லாமல் ஆக்குவதற்கு இலங்கையில் அனைத்து மக்களும் குறிப்பாக சிறுபான்மையின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இங்கு பிரதானமானது. பல்லின மக்கள் வாழக்கூடிய இந்த நாட்டில் ஏனைய இன மக்களும் தங்கள் மத கலாசார உரிமைகளுடன் வாழ்வதை போன்று சிறுபான்மையினரின் உரிமைகளும் இங்கு உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக சட்டங்கள் கொண்டு வந்து அவை அமுல்படுத்தப்பட வேண்டும். இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் பெரும்பான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அனைத்து உரிமைகளும் சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டும். 

 சிறுபான்மையினர் உரிமைகள் எனும் போது அவர்களுக்கான காணி உரிமை, மொழி உரிமை, கல்வி உரிமை என்பது பிரதானமானது. சிறுபான்மையினருடன் தொடர்புடைய சட்டங்களை அதாவது முஸ்லிம் தனியார் சட்டம் தேசவழமை சட்டம், கண்டிய சட்டம் என்பவன இன்னும் முறையாக திருத்தப்படாது இருக்கின்றது. எனவே புதிய அரசியலமைப்பின் ஊடாக இவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அவை சட்டமாக அமுலாக்கப்பட வேண்டும் .முஸ்லிம் தனியார் சட்டத்தை எடுத்துக் கொண்டால் பெண் பிள்ளைகளின் திருமண வயது எல்லை சரியாக குறிப்பிடப்படவில்லை என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. திருமண பதிவு என்பது கட்டாயம் இல்லை அதாவது (வெள்ளையில் எழுதுவது) பள்ளியில் அந்த புத்தகத்தில் கையப்பம் வைப்பது. 

 இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே புதிய அரசியலமைப்பில் இவை உள்வாங்கப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டால் ஒவ்வொருவரும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்க முடியும். தற்போதுள்ள இந்த இருபதாவது திருத்த சட்டத்தின் படி பெண்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களுடைய கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும் இனிவரும் யாப்பு சீர்திருத்தத்தில் பெண்களுடைய வகிபங்கு 50% உள்வாங்கப்பட வேண்டும். அரசியலிலும் பெண்களுடைய பங்களிப்பு மிக மிகக் குறைவு. 2018 இல் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்கள் 25% இல்லை எனவே பாராளுமன்றத்தில் பெண்களுடைய பிரதிநிதித்துவ வீதம் ஒரு குறிப்பிட்ட வீதமாக அரசியலமைப்பின் ஊடாகக் கொண்டு வரப்பட வேண்டும். எனவே அதன் மூலம் பெண்களுடைய அரசியல் பங்களிப்பு அதிகமாகும்.

சிறுபான்மை சமூகத்தினர் தங்களுடைய சமூகத்தில் மாற்றுப் பாலின இனத்தவர்களும் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் வீதம் இன்று அதிகரித்துள்ளது. அவர்களும் ஏனையவர்களைப் போன்று மனிதர்கள் எனவே அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு யாப்பினுடைய வடிவமைப்பிலும் சட்டங்கள் வரைவுகளை பார்த்தோமேயானால் கிராம மட்டங்களில் ஒவ்வொரு சட்டங்களும் அமுல்படுத்தப்படும் போது அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதில் ஒவ்வொரு விடயங்களையும் பதிவு செய்வார்கள் அதில் ஆண், பெண் என்று குறிப்பிடப்பட்டிருக்குமே ஒழிய மாற்று பாலினத்தவர்கள் அல்லது ஏனைய பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் அரச மட்டத்தில் மிக மிகக் குறைவாகவே உள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது இரண்டு வருட காலமாக தங்களுடைய ஒவ்வொரு செயல்திட்டத்திலும் அவர்களுக்கென்று தனியான ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். 

ஆனால் அரசியல் ரீதியாக அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் .அவர்களும் மனிதர்கள் எனவே அவர்களுடைய அனைத்து உரிமைகளும் அரசியலமைப்பு ரீதியாக சட்டமாக கொண்டு வரப்பட வேண்டும். எனவே சிறுபான்மையினர்களின் உரிமையோடு சேர்த்து, மாற்று பாலின சிறுபான்மையினர்களின் உரிமைகளும் இங்கு புதிய அரசியல் யாப்பினூடாக சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.